சென்னை கலைஞர் கருணாநிதி நகரில் காரில் கொண்டு செல்லப்பட்ட ஹவாலா பணம் ரூ. 1 கோடி தனிப்படை போலீசாரிடம் சிக்கியது.
சென்னை கலைஞர் கருணாநிதி நகர் ஆற்காடு சாலையில் உள்ள வீட்டில் சட்டவிரோதமாக பணப்பரிமாற்றம் நடைபெறுவதாக தியாகராய நகர் காவல் துணை ஆணையர் தலைமையிலான தனிப்படை போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் தனிப்படை போலீசார் அங்கு விரைந்து சென்று கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர். அப்போது, சந்தேகத்திற்கிடமான காரை சோதனை செய்தபோது அதனுள் கணக்கில் வராத ரூபாய் ஒரு கோடி ரொக்க பணம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
பின் போலீசார் அந்த பணத்தை பறிமுதல் செய்தனர். மேலும் ஹவாலா பணம் வைத்திருந்த இலங்கையைச் சேர்ந்த கமலநாதன், மடிப்பாக்கத்தைச் சேர்ந்த வேங்கட கிருஷ்ணன், மயிலாடுதுறையைச் சேர்ந்த கார்த்திகேயன், கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த மற்றொரு கர்த்திகேயன் ஆகியோரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டது.
பிறகு இதையடுத்து வருமானவரித்துறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னர்,
வருமானவரித்துறை கூடுதல் இயக்குநர் புலனாய்வு பிரிவு சுதர்சன் தலைமையிலான
அதிகாரிகள் பிடிபட்ட 4 பேரையும் பறிமுதல் செய்யப்பட்ட ரூ. 1 கோடி பணம் கைப்பற்றி
வருமானவரித்துறை அலுவலகத்திற்குக் கொண்டு சென்றனர்.







