ஹார்டுவேர் கடையில் தீ விபத்து – ரூ.25 லட்சம் சேதம்

ஆதம்பாக்கத்தில் ஹார்டுவேர் கடையில் ஏற்பட்ட தீ விபத்தில், 25 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் தீயில் எரிந்து சேதமானதாக கூறப்படுகிறது.   சென்னையை அடுத்த ஆதம்பாக்கம் மேடவாக்கம் மெயின் ரோட்டை சேர்ந்தவர் முகமது. இவர்…

ஆதம்பாக்கத்தில் ஹார்டுவேர் கடையில் ஏற்பட்ட தீ விபத்தில், 25 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் தீயில் எரிந்து சேதமானதாக கூறப்படுகிறது.

 

சென்னையை அடுத்த ஆதம்பாக்கம் மேடவாக்கம் மெயின் ரோட்டை சேர்ந்தவர் முகமது. இவர் தனது வீட்டின் கீழ் தளத்தில் கே.எம்.ஹார்டுவேர்ஸ் என்ற வீட்டு பொருட்கள், மின்சாதன பொருட்கள், பெயிண்ட் பொருட்கள் விற்பனை செய்து வருகிறார். இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் காலை முழுவதும் கடையை திறந்து வைத்து பிற்பகலுக்கு மேல் அரை நாள் விடுமுறை விட்டுள்ளார்.

 

இந்நிலையில், கடையை அடைத்து விட்டு சென்ற சிறிது நேரத்திலேயே கடையில் இருந்து கரும்புகை வெளியேறியுள்ளது. இதை பார்த்து அதிர்ச்சியடைந்த அவர் கடையை திறந்து பார்த்த போது தீ விபத்து ஏற்பட்டுள்ளது தெரியவந்தது. உடனே கிண்டி தீயணைப்புத்துறைக்கு தகவல் கொடுத்துள்ளார். ஆனால் தீயணைப்புத்துறை வீரர்கள் சம்பவ இடத்திற்கு வருவதற்கு முன்பே தீ கொளுந்து விட்டு எரிய தொடங்கியது. இதனால், அந்த பகுதி முழுவதுமே கரும்புகையாக காட்சியளித்தது.

 

பின்னர் வேளச்சேரி, தேனாம்பேட்டை, தாம்பரம், திருவல்லிகேணி, மேடவாக்கம் அசோக்நகர் உள்ளிட்ட 7 இடங்களில் இருந்து தீயணைப்பு வாகனங்கள் விரைந்து வந்தன. இதையடுத்து, தண்ணீரை பீச்சி அடித்து சுமார் 2 மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீயணைப்புத்துறை வீரர்கள் தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தால், மேடவாக்கம் பிரதான சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தீ விபத்து ஏற்பட்டது ஹார்டுவேர் கடை என்பதால், கடையில் இருந்த அனைத்து பொருட்களும் தீயில் எரிந்து சேதமானது. சுமார் 25 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் தீயில் எரிந்து சேதமானதாக அதன் உரிமையாளர் தெரிவித்துள்ளார். மின் கசிவால் தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படும் நிலையில், தீ விபத்து குறித்து ஆதம்பாக்கம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.