அக். 2 முதல் நாடு தழுவிய யாத்திரை: சோனியா காந்தி

மகாத்மா காந்தி பிறந்த தினமான அக்டோபர் 2ம் தேதி முதல் நாடு தழுவிய பிரச்சார யாத்திரை மேற்கொள்ளப்படும் என்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தெரிவித்துள்ளார். வரும் 2024ம் ஆண்டு நாடாளுமன்றத்திற்குத் தேர்தல் நடைபெற…

மகாத்மா காந்தி பிறந்த தினமான அக்டோபர் 2ம் தேதி முதல் நாடு தழுவிய பிரச்சார யாத்திரை மேற்கொள்ளப்படும் என்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தெரிவித்துள்ளார்.

வரும் 2024ம் ஆண்டு நாடாளுமன்றத்திற்குத் தேர்தல் நடைபெற உள்ளதால், அதை எதிர்கொள்வதற்கு கட்சியை தயார்படுத்தும் நோக்கில் காங்கிரஸ் கட்சியின் 3 நாள் சிந்தனை அமர்வு ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் நடைபெற்றது.

மாநாட்டின் இறுதி நாளான இன்று நிறைவுரை ஆற்றிய சோனியா காந்தி, நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொள்வதற்கு ஏற்ப கட்சியில் அமைப்பு ரீதியில் மேற்கொள்ள உள்ள மாற்றங்கள் குறித்து குறிப்பிட்டார்.

காங்கிரஸ் கட்சியில் புதிதாக ஆலோசனைக் குழு ஒன்று உருவாக்கப்படும் என்றும், காங்கிரஸ் செயற்குழு உறுப்பினர்களில் இருந்து இவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என்றும் கூறினார்.

இந்த குழு தனது தலைமையின் கீழ் செயல்படும் என்றும் உள்கட்சி விவகாரங்கள் குறித்தும், நாடு எதிர்கொள்ளும் சவால்கள் குறித்தும் இதில் விவாதிக்கப்படும் என்று சோனியா காந்தி தெரிவித்தார்.

காங்கிரசை அமைப்பு ரீதியில் மாற்றி அமைக்கவும், நிர்வாகிகள் நியமிக்கப்படுவதில் விதிகளை வகுக்கவும், நிர்வாகிகளுக்கு இடையே தொடர்புகளை வலுப்படுத்தவும், பிரச்சாரம் செய்யவும், நிதி மற்றும் தேர்தல் நிர்வாகப் பணிகளை மேற்கொள்ளவுமான பணிகளை ஆலோசனைக் குழு கவனித்துக்கொள்ளும் என சோனியா காந்தி கூறினார்.

காந்தி ஜெயந்தி தினமான அக்டோபர் 2ம் தேதி முதல், நாடு தழுவிய பாரத யாத்திரை மேற்கொள்ளப்படும் என்று குறிப்பிட்ட சோனியா காந்தி, கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை இந்த யாத்திரை நடைபெறும் என்றார்.

கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, மக்களுடனான தொடர்பை காங்கிரஸ் கட்சி இழந்துவிட்டதாகக் குறிப்பிட்டார். கட்சியை புதுப்பிப்பதற்கு இதுவே உரிய நேரம் என தெரிவித்த அவர், தேர்தலின்போது ஒரு குடும்பத்தில் ஒருவருக்கு மட்டுமே போட்டியிட வாய்ப்பு வழங்கப்படும் என்றார்.

வரும் நாடாளுமன்றத் தேர்தலின்போது காங்கிரஸ் எதிர்கொள்ள இருப்பது ஒரு மாநில கட்சியை அல்ல என்று தெரிவித்த ராகுல் காந்தி, கட்சி மட்டுமின்றி பல்வேறு அமைப்புகளையும் எதிர்கொண்டு வெற்றி பெற வேண்டிய கட்டாயம் காங்கிரஸ் கட்சிக்கு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

எனவே, அதற்கேற்ப கட்சிக்குள் ஏற்படும் சீர்திருத்தங்களுக்கு அனைவரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று ராகுல் காந்தி கேட்டுக்கொண்டார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.