பாராட்டுக்களால் மகிழ்ச்சியடைகிறேன் – முதலமைச்சர் நெகிழ்ச்சி

செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான உலகத்தரம் வாய்ந்த ஏற்பாடுகளால் அனைத்து தரப்பில் இருந்தும் வரும் பாராட்டுகளால் மகிழ்ச்சியடைகிறேன் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.   44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னையில் நடைபெற்று வருகிறது. இந்த…

செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான உலகத்தரம் வாய்ந்த ஏற்பாடுகளால் அனைத்து தரப்பில் இருந்தும் வரும் பாராட்டுகளால் மகிழ்ச்சியடைகிறேன் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

 

44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னையில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டிக்கான தொடக்க நிகழ்ச்சியை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். கடந்த 28-ம் தேதி தொடங்கிய போட்டிகள் ஆகஸ்டு 10-ம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் 188 நாடுகளை சேர்ந்த 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீரர்கள் கலந்து கொண்டனர்.

 

செஸ் போட்டிக்கான ஏற்பாடுகளை செய்வதற்கு தமிழ்நாடு அரசு 95 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து பணிகளை சிறப்பாக ஏற்பாடு செய்துள்ளது. இப்போட்டிக்காக 52 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் ஒரு அரங்கமும், 22 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் மற்றொரு அரங்கம் என இரண்டு பிரம்மாண்ட அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது. ஒரே நேரத்தில் ஆயிரத்து 400 வீரர்கள் விளையாடும் வகையில் 700 செஸ் போர்டுகள் அமைக்கப்பட்டுள்ளது.

 

இதேபோல், குடிநீர் வசதி, சாலை வசதி, வீரர்களுக்கான ஓய்வு அறை, வாகன வசதி உள்ளிட்ட அடிப்படை தேவைகளுக்கான ஏற்பாடுகள் வரை அனைத்தும் சிறப்பாக செய்யப்பட்டுள்ளது. செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான ஏற்பாடுகளை தமிழ்நாடு அரசு 4 மாதங்களில் செய்து முடித்துள்ளது. மேலும் யாரும் எதிர்பாராத வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதால் பல்வேறு தரப்பினரும் தமிழ்நாடு அரசுக்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

பிரதமர் மோடியும் தொடக்க நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை பாராட்டியதோடு, இன்று மனதின் குரல் நிகழ்ச்சியிலும் செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான ஏற்பாடுகள் சிறப்பாக இருந்ததாக தெரிவித்தார். இந்நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டிவிட்டரில் நெகிழ்ச்சி பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், உலகத் தரம் வாய்ந்த ஏற்பாடுகளுக்கு அனைத்து தரப்பினரிடம் இருந்து வரும் பதில்களும், பாராட்டுக்களாலும் மகிழ்ச்சி அடைகிறேன் என தெரிவித்துள்ளார்.

 

மேலும் செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெறும் மைதானத்தை நேரில் சென்று பார்வையிட்டதாகவும், வெற்றிக்காக அயராது உழைக்கும் குழுவினரை ஊக்கப்படுத்தியதாகவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

 

– இரா.நம்பிராஜன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.