நாடு முழுவதும் நாளை (நவம்பர் 8) தீபாவளிப் பண்டிகை உற்சாகமாகக் கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி, பொதுமக்கள் புத்தாடை அணிந்து, பட்டாசுகள் வெடித்து, இனிப்புகளைப் பரிமாறி தீபாவளியைக் கொண்டாடத் தயாராகி வருகின்றனர். இந்நிலையில், அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் நாட்டு மக்களுக்குத் தீபாவளி வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் மக்கள் அனைவருக்கும் தனது தீபாவளி திருநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “தீப ஒளித் திருநாளாம் “தீபாவளியை” மகிழ்ச்சியுடனும், உற்சாகத்துடனும் கொண்டாடி மகிழும் மக்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். கொடுஞ்செயல்களால் மக்களையும், தேவர்களையும் பெரும் துன்பத்திற்கு ஆளாக்கிக் கொண்டிருந்த நரகாசூரன் எனும் அரக்கனை திருமால் அழித்த இத்திருநாளில் மக்கள் அனைவரின் இல்லங்களிலும் இருளை நீக்கி புதிய ஒளியையும், புத்தம் புதிய நம்பிக்கையையும் பாய்ச்சும் நாளாக அமையட்டும்.
தீமைகள் அகன்று நன்மைகள் பெருகும் இந்த தித்திக்கும் திருநாளில் ஏழை, எளிய மக்கள் அனைவரின் வாழ்விலும் நலமும், வளமும் பெருகி ஆரோக்கியமும் ஒற்றுமையும் தழைத்தோங்கட்டும்.” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.




