அமெரிக்காவில் சீன புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது நிகழ்ந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் 10 பேர் பலியாகியுள்ளனர்.
அமெரிக்கா கலிபோர்னியா மாகாணத்தின் மாண்ட்ரே பார்க் பகுதியில் சீன புத்தாண்டான சந்திர புத்தாண்டை கொண்டாடுவதற்காக ஆயிரக்கணக்கான நபர்கள் கூடியிருந்தனர். அப்போது ஒருவர் கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தினார். இந்தச் சம்பவத்தில் 10 பேர் பலியாகியுள்ளதாக காவல்துறை தரப்பில் கூறப்பட்டுள்ளது. மேலும் 10 பேர் காயமடைந்ததாக கூறப்படுகிறது.
72 வயதுடைய ஹூ சான் திரான் ஒருவர்தான் இந்த துப்பாக்கிச் சூட்டை நடத்தியுள்ளதாக தெரியவந்துள்ளது. மேலும் அவரையே அவர் சுட்டுக்கொண்டுள்ளதும் சம்பவ இடத்திலேயே அவர் இறந்து கிடந்ததும் கண்டறியப்பட்டுள்ளது.
ஒரு குறிப்பிட்ட பிரிவினரை குறிவைத்து ஹூ சான் சுட்டாரா என்பது இன்னும் கண்டறியப்படவில்லை. மேலும், இந்த சம்பவத்தில் வேறு யாரும் சந்தேகிப்படவில்லை என்பது தெரியவந்துள்ளது. ஆனால் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்த சம்பவத்தால் பொது இடங்களில் அமெரிக்க கொடி அரை கம்பத்தில் பறக்கவிடப்படும் என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார். சந்திர புத்தாண்டையொட்டி இரண்டு நாள் கொண்டாட்டத்துக்காக ஆயிரக்கணக்கில் மக்கள் கூடியிருந்தனர். முதல் நாள் துப்பாக்கிச் சூடு சம்பவம் நடந்துள்ளதால் இரண்டாம் நாள் கொண்டாட்டங்களுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளன.







