கோவையில் துப்பாக்கி கலாசாரம் சினிமா பாணியைப் போல தலைதூக்கியுள்ளது-வானதி சீனிவாசன்

கோவை மாநகரில் பரவிவரும் துப்பாக்கி கலாசாரம், சினிமா பாணியை போன்று தலைதூக்கியுள்ளது என்று கோவை தெற்குத் தொகுதி எம்எல்ஏ வானதி சீனிவாசன் கூறியுள்ளார். கோவை தெற்கு தொகுதிக்கு உட்பட்ட, சிட்டி அரசு உயர்நிலைப் பள்ளியில்…

கோவை மாநகரில் பரவிவரும் துப்பாக்கி கலாசாரம், சினிமா பாணியை போன்று தலைதூக்கியுள்ளது என்று கோவை தெற்குத் தொகுதி எம்எல்ஏ வானதி சீனிவாசன் கூறியுள்ளார்.

கோவை தெற்கு தொகுதிக்கு உட்பட்ட, சிட்டி அரசு உயர்நிலைப் பள்ளியில் மாணவ மாணவிகளுக்கான கணினி இருக்கைகளை பாஜக தேசிய மகளிர் அணி தலைவரும், எம்எல்ஏவுமான வானதி சீனிவாசன் வழங்கினார். முன்னதாக இந்த நிகழ்ச்சியில் பாஜக சின்னம், மோடி, அண்ணாமலை உள்ளிட்டோர் புகைப்படங்கள் அடங்கிய பிளக்ஸ் பேனர் வைக்கப்பட்டிருந்ததால் சர்ச்சை ஏற்பட்டது. பள்ளி தலைமையாசிரியர் உத்தரவிட்டதையடுத்து மாணவர்கள் அந்த பேனரை அகற்றினர்.

இதையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த வானதி சீனிவாசன் “ஆக்கிரமிப்புகளை அகற்றும் மாநகராட்சியின் நடவடிக்கையை பாரபட்சமின்றி செய்ய வேண்டும். கோயில்களை அப்புறப்படுத்த எடுக்கும் நடவடிக்கைகளை திமுக கட்சி மன்றங்களை அகற்றுவதில் அதிகாரிகள் காட்டுவதில்லை. கோவை மாநகராட்சியில் சாலைகளின் நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. கோவை மாநகராட்சியை புறக்கணிக்காமல் நல்ல சாலையை அமைக்க வேண்டும். சென்னை மாநகராட்சி போன்று கோவையிலும் மேம்பாலங்களின் தூண்களில் அழகிய ஓவியங்கள் வரையப்பட்டு வருகின்றன.

இதில் உண்மையான தகவல்களை மறைத்து ஓவியங்கள் வரையப்பட்டதாகக் கூறி அனைத்து தூண்களிலும் உள்ள ஓவியங்களை ஒரு தரப்பினர் அழித்துள்ளனர். இது சரியான நடவடிக்கை இல்லை. அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். கோவையில் தொடர் கொலைகள் நடைபெற்றது. தமிழகம் முழுவதும் சட்டம் ஒழுங்கு மோசமாக உள்ளது. திமுகவினரின் வன்முறை சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. முதலமைச்சர் அவரது கட்சியினருக்கு அறிவுரை வழங்க வேண்டும்.

ஈரோடு இடைத்தேர்தலில் மட்டுமே முழு கவனத்தையும் செலுத்தாமல், தமிழகத்தில் உள்ள பல்வேறு பிரச்னைகளுக்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு நிறுவனம் முடங்கிப் போகும் அளவிற்கு ஒரு தொகுதியில் தேர்தல் உள்ளது. மேலும், கோவை கொலை சம்பவங்களில் ஈடுபட்டவர்களை உடனடியாக கைது செய்துள்ளனர். இருப்பினும் இது போன்ற சம்பவங்கள் நடக்காமல் பார்த்துக் கொள்வதற்கும், பொதுமக்களை பாதுகாப்பதற்கும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.

நகர்ப்புற பகுதிகளிலேயே இது போன்ற வன்முறைகள் நடப்பது, ரெளடிகளுக்கு பயம் இல்லாத நிலையை காட்டுகிறது. கோவை மாநகரில் பரவிவரும் துப்பாக்கி கலாசாரம், சினிமா பாணியை போன்று தலைதூக்கியுள்ளது. எனவே, இதில் முதலமைச்சர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.” என்றார்.

-ம.பவித்ரா

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.