டிஜிட்டல் இந்தியாவின் முன்னோடியாக குஜராத் மாடல் திகழ்கிறது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி இரண்டு நாள் சுற்றுப்பயணமாக குஜராத் சென்றுள்ளார். அங்கு காந்திநகரில் நடைபெற்ற டிஜிட்டல் இந்தியா 2022 என்ற மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றினார்.
அப்போது பேசிய அவர், கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு நம் வாழ்வின் பெரும்பாலான நேரங்களை வரிசையில் நிற்பதற்காக செலவிட்டோம். பிறப்பு சான்றிதழ் வாங்குதவற்காக, கட்டணங்களை செலுத்த, ரேஷன் பொருட்கள் வாங்க, அட்மிஷனுக்காக, வங்கி இப்படி எதுவாக இருந்தாலும் வரிசையில் காத்து நின்றோம். ஆனால் தற்போது இந்தியாவில் இந்த நடைமுறை அழிக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான மக்கள் டிஜிட்டல் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி தனது வேலைகளை எளிமையாக்கியுள்ளனர் என்று கூறினார்.
மேலும், டிஜிட்டல் இந்தியா திட்டம் நமது நாட்டை தொழில்நுட்பத்தின் அடுத்த நிலைக்கு எடுத்து சென்றுள்ளது. மற்ற நாடுகள் 3வது தொழில்துறை மாற்றங்களுக்காக போராடி கொண்டிருக்கும் போது இந்தியா தொழில்துறை 4.0 மாற்றத்தை நிகழ்த்தி காட்டியது. இதற்கு முன்னோடியாக இருந்தது குஜராத் மாடல் தான் என்று பெருமிதம் தெரிவித்தார்.
அதுமட்டுமல்லாமல், தற்போது அனைத்து இடங்களிலும் இணையதள வசதிகளுக்காக டேட்டா சென்டர், ஜிஎஸ்வான், இ-கிராம் மற்றும் ஏடிவிடி ஜன் சேவா கேந்திரா போன்ற முன்முயற்சிகளை மாநிலம் எடுத்திருப்பதால், குஜராத் இந்த முயற்சியிலும் முன்னணியில் உள்ளது என்று பிரதமர் மோடி கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், குஜராத் மாநிலம் தான் டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் அடிப்படையாக விளங்குகிறது. ஜன்தன் வங்கி கணக்கு சேவை, ஆதார் போன்ற சேவைகள் ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்கு பலவித நன்மைகளை கொண்டு சேர்த்துள்ளது. முந்தைய ஆட்சிகளில் நலதிட்டங்கள் தகுதியான மக்களுக்கு சென்றடையாத நிலை இருந்தது. விதவை உதவி தொகை தபால் நிலையங்கள் அல்லது வங்கி மூலமாகவே வழங்கப்படும் என்று எனது ஆட்சியில் கூறிய போது தவறான நோக்கம் கொண்டவர்கள் மட்டும் அதை எதிர்த்தனர் என்றார்.
இப்போது இந்த திட்டத்தின் மூலம் தகுதியானவர்களுக்கு மட்டுமே விதவை உதவி தொகைகள் சென்றடைகிறது. இதன் மூலம் கடந்த 8 ஆண்டுகளில் இதுவரை ரூ.23,00,000 கோடி நேரடியாக பயனாளிகளுக்கு வங்கி கணக்கில் செலுத்தப்பட்டுள்ளது. மேக் இன் இந்தியா மற்றும் டிஜிட்டல் இந்தியா ஆகிய இந்த இரண்டு திட்டங்களின் மூலம் இந்தியா தொழில்துறை வளர்ச்சி 4.0ல் புதிய உயரத்தை எட்டும் என்று கூறினார்.








