தமிழ்நாடு ப்ரீமியர் லீக் கிரிக்கெட் (TNPL) போட்டி தமிழகத்தின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. நேற்றிரவு நடைபெற்ற 9ஆவது லீக் ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணியும், ஐட்ரீம் திருப்பூர் தமிழன்ஸ் அணியும் மோதின.
திண்டுக்கல் என்பிஆர் கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற நேற்றைய ஆட்டத்தில் டாஸ் வென்ற திண்டுக்கல் டிராகன்ஸ் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து, திருப்பூர் தமிழன்ஸ் முதலில் விளையாடியது. நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் அந்த அணி 8 விக்கெட் இழப்புக்கு 145 ரன்களை எடுத்தது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அதிகபட்சமாக எஸ். அரவிந்த் மட்டும் 32 ரன்கள் எடுத்தார். திண்டுக்கல் டிராகன்ஸ் சார்பில் பந்துவீச்சாளர் எம்.சிலம்பரசன் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
ரங்கராஜ் சுதேஷ், கேப்டன் ஹரி நிஷாந்த் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
இதையடுத்து 146 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் திண்டுக்கல் டிராகன்ஸ் அணி களத்தில் இறங்கியது. அந்த அணி 18.1 ஆவது ஓவரில் 148 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
தொடக்க ஆட்டக்காரர் கே.விஷால் வைத்யா 84 ரன்கள் எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். கேப்டன் ஹரி நிஷாந்த் 25 ரன்களில் ஆட்டமிழக்க விக்கெட் கீப்பர் மணி பாரதி 38 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இவ்வாறாக 9 விக்கெட் வித்தியாசத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணி வெற்றி பெற்று அசத்தியது.
திண்டுக்கல் அணியின் விஷால் வைத்யா ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
புள்ளிப் பட்டியலில் திண்டுக்கல் அணி 3வது இடத்தில் உள்ளது. இதுவரை தோல்வியே காணாத நெல்லை அணி 6 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. அடுத்த இடத்தில் மதுரை பாந்தர்ஸ் அணி உள்ளது.