குஜராத்தில் இயங்கி வரும் முன்னணி நகை விற்பனை நிறுவனம் ஊழியர்களுக்கு 8 கோடி ரூபாய் மதிப்பில் ஊக்கத்தொகை வழங்கியுள்ளது.
குஜராத்தில் மிகவும் பிரசத்தி பெற்ற நிறுவனம் கலாமந்திர் ஜுவல்லர்ஸ். கடந்த 1986ஆம் ஆண்டு சூரத் அடுத்த கோசாம்பா என்ற நகரில் தொடங்கப்பட்டது. சுமார் 200 சதுர மீட்டர் பரப்பளவு கொண்ட சிறிய கடையாக 5 பேருடன் தொடங்கப்பட்ட இந்த கடை இந்தியாவின் முன்னணி நகை விற்பனை நிறுவனமாக மாறியுள்ளது.
இந்த நிறுவனத்தில் தற்போது 650க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். ரிஷ்டா, கிங்லி, இந்தோ-இத்தாலியன், புருஷம், பிளாட்டினம் & சஜ்தாஜ்கே போன்ற சில முக்கிய தேசிய நகை பிராண்டுகளை இந்நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. இது குஜராத்தின் முன்னணி சில்லறை நகை பிராண்டாக உள்ளது.
இந்நிலையில் அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்றிய ஊழியர்களை கௌரவிக்கும் வகையில் கலாமந்திர் பிளாட்டினம் சாம்பியன்ஸ் 3.0 மற்றும் கோல்டன் விருது 4.0 ஆகிய இரு விருதுகளை அறிமுகம் செய்து ஊழியர்களுக்கு வழங்கியுள்ளது. அதன்படி 200 ஊழியர்களுக்கு ரூ. 8 கோடி ரொக்கப்பரிசு வழங்கி அசத்தியுள்ளது. ரூ.8 கோடி ரொக்கப் பரிசு என்பது இந்தியாவில் சில்லறை நகை விற்பனை நிறுவனத்தால் வழங்கப்பட்ட மிகப் பெரிய பரிசுத் தொகையாகும்.எங்கள் ஊழியர்கள் அதற்குத் தகுதியானவர்கள் என கலாமந்திர் ஜூவல்லர்ஸ் உரிமையாளர் ஷரத் ஷா தெரிவித்துள்ளார்.கலாமந்திர் ஜுவல்லர்ஸின் வெற்றியில் குறிப்பிடத்தக்க பங்கு வகித்த பங்குதாரர்கள், கூட்டாளிகள் மற்றும் சப்ளையர்களும் கௌரவிக்கப்பட்டனர்.






