ஹைதராபாத் அணியை வீழ்த்தி குஜராத் அணி அதிரடி வெற்றி பெற்றதால் பிளே ஆஃப் சுற்றுக்கு முதல் அணியாக முன்னேற்றியுள்ளது.
ஐபிஎல் தொடரின் 16வது சீசன் கோலாகலமாகத் தொடங்கி நடைபெற்று வருகிறது. மொத்தம் 10 அணிகள் பங்கேற்றுள்ள இந்த தொடரில், ஒவ்வொரு அணியும் போட்டிகளில் வெற்றி பெற தீவிரம் காட்டி வருகின்றன. அந்த வகையில், அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியுடன் குஜராத் டைட்டன்ஸ் அணி மோதியது
இதில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய குஜராத் டைட்டன்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர் சாஹா டக் அவுட் ஆகி ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்தார். இதையடுத்து கைகோர்த்த சுப்மன் கில் – சாய் சுதர்ஷன் ஜோடி, அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.
பந்துவீச்சாளர்களை கதிகலங்கச் செய்த சுப்மன் கில் 58 பந்துகளில் 101 ரன்கள் எடுத்து அசத்தினார். மற்றொரு புறம் சாய் சுதர்ஷன் 36 பந்துகளில் 47 ரன்கள் விளாசினார். அதன்பின்னர் களமிறங்கிய பேட்ஸ்மேன்கள் அனைவரும் சொற்ப ரன்களில் அடுத்தடுத்து வெளியேற, குஜராத் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 188 ரன்கள் குவித்தது.
20வது ஓவரை வீசிய சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் புவனேஷ்வர் குமார் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். இதையடுத்து 189 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி களமிறங்கியது.
தொடக்க வீரர்களான அன்மோல் ப்ரீத் 5 ரன்கள், அபிஷேக் சர்மா 4 ரன்கள், மார்க்ரம் 10 ரன்கள், திரிபாதி 1 என அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். இதன்பிறகு 5-வது வீரராக களமிறங்கிய ஹென்ரி க்ளாசன் தனது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
ஹென்ரி க்ளாசன் மட்டும் நிலைத்து ஆட சன்வீர்சிங் 7 ரன்கள், அப்துல் சமத் 4 ரன்கள், ஜென்சன் 3 ரன்கள் என அடுத்துடுத்து விக்கெட் வீழ்ந்தது. இதனால் 59 ரன்களுக்கு ஐதராபாத் அணி 7 விக்கெட்டகளை இழந்தது. இதன் பிறகு 8-வது விக்கெட்டுக்கு க்ளாசனுடன் ஜோடி சேர்ந்த புவனேஷ்வர் குமார் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
இதனைத் தொடர்ந்து க்ளாசன், 44 பந்துகளில் 4 பவுண்டரி 3 சிக்சருடன் 64 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். புவனேஷ்வர் குமாரும் 27 ரன்களில் ஆட்டமிழந்த நிலையில் நிர்ணையிக்கப்பட்ட 20 ஓவர்களில் ஐதராபாத் அணி 9 விக்கெட் இழப்பிற்கு 154 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் குஜராத் அணி அதிரடியாக வெற்றி பெற்றது.
குஜராத் அணி தரப்பில் முகமது ஷமி, மொஹித் சர்மா ஆகியோர் தலா 4 விக்கெட்டுகள் வீழ்த்தினர். இந்த வெற்றியின் மூலம் குஜராத் டைட்டன்ஸ் அணி நடப்பு ஆண்டில் ப்ளேஅப் சுற்றுக்கு முதல் அணியாக முன்னேறியது குறிப்பிடத்தக்கது.







