தமிழகத்தில் சமீபத்திய ஜிஎஸ்டி வரி வசூல் புள்ளிவிவரங்களின் அடிப்படையில், வரி வருவாயில் 5% சரிவு ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகின. இதனைச் சுட்டிக்காட்டிய திமுகவினர், தமிழக அரசின் நிதி நிர்வாகம் மற்றும் தொழில் வளர்ச்சி தொடர்பாக விமர்சனங்களை முன்வைத்தனர். ஜிஎஸ்டி வசூல் சரிவை தமிழகத்தின் பொருளாதார நிலை மற்றும் அரசின் நிதி மேலாண்மையுடன் தொடர்புபடுத்தி திமுகவினர் கேள்வி எழுப்பிய நிலையில், ஜிஎஸ்டி புள்ளிவிவரங்களை முழுமையாகப் புரிந்துகொள்ளாமல் தவறான தகவல்கள் பரப்பப்படுவதாக தவெக குற்றம்சாட்டியுள்ளது.
மேலும், Gross GST மற்றும் Post-Settlement GST ஆகியவற்றுக்கு இடையேயான வேறுபாட்டை கணக்கில் கொள்ளாமல் ஜிஎஸ்டி வசூல் குறைந்துள்ளதாகக் கூறுவது தவறான பார்வை என தவெக IT Wing தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் பதிவொன்றை வெளியிட்டுள்ளது.
அந்த பதிவில், “GST 5% சரிவு… தமிழக அரசின் நிர்வாகத் தோல்வி” என்று கடந்த சில நாட்களாக திமுகவினரின் அரைவேக்காட்டு பிரச்சாரத்தின் உண்மை முகம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. Gross GST-ஐ மட்டும் காட்டி மக்களை ஏமாற்ற முயன்றவர்களை, அதிகாரப்பூர்வத் தரவு நறுக்கென்று குட்டியுள்ளது. தமிழ்நாட்டிற்கு உண்மையில் கிடைக்கும் Post-Settlement GST வருவாய் 16.1% உயர்ந்துள்ளது என தமிழ்நாடு நிதித்துறை செயலாளரே தெளிவுபடுத்தியுள்ளார்.
அப்படியிருக்க, “5% குறைந்துவிட்டது” என்று மட்டும் கூறி பொருளாதாரம் வீழ்ச்சி, அரசு நிர்வாகத் தோல்வி என்று அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு கூப்பாடு போடுபவர்களின் நோக்கம் அம்பலமாகியுள்ளது. உற்பத்தி மற்றும் நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு பொருட்களை விநியோகிக்கும் தமிழ்நாடு போன்ற மாநிலங்களில், IGST Settlement உள்ளிட்ட பல்வேறு காரணிகள் Gross GST எண்ணிக்கையில் தாக்கத்தை ஏற்படுத்தும்.
எனவே, தமிழ்நாட்டின் உண்மையான GST வருவாய் நிலையை மதிப்பிடும்போது Post-Settlement GST தரவுக்கே முக்கியத்துவம் அளிக்க வேண்டும். பொய் பிரச்சாரத்தால் உண்மையை வெல்ல முடியாது ! இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.




