பட்டாசு வெடிக்கும்போது பின்பற்றப்பட வேண்டிய வழிமுறைகளை பொது சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.
உலகத்தமிழர்கள் அனைவரும் தீபாவளி பண்டியை சிறப்பாக கொண்டாடுவர். இந்தாண்டு தீபாவளி நவம்பர் 4ம் தேதி வரவுள்ளது. அன்றைய தினம் பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகளை உறவினர்களிடம் பகிர்ந்தும் மக்கள் சிறப்பாக பண்டிகையை கொண்டாடுவர். அன்றைய தினத்தில் பட்டாசு வெடிப்பதால் சுற்று சுழல் பெருமளவில் பாதிக்கப்படுவதாக கூறி கோர்ட்டில் வருடா வருடம் பொதுநல வழக்கு தொடர்வதும், நீதிமன்றம் கட்டுப்பாடுகளுடன் பட்டாசு வெடிக்க அனுமதி வழங்குவதும் தொடர்கதையாக நடந்து வருகிறது. இந்நிலையில், பட்டாசி வெடிக்கும்போது பின்பற்ற வேண்டிய வழிமுறைகளை பொது சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.
இதில், பட்டாசுகளை மூடிய கலனில் பாதுகாப்பாக வைத்து, பின் திறந்தவெளியில் வெடிக்க வேண்டும் எனவும், எளிதில் தீப்பிடிக்கும் வகையிலான ஆடைகள் அணிவதை தவிர்த்து, காலணிகளை அணிந்து பட்டாசுகளை வெடிக்க வேண்டுமெனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. குழந்தைகள் தனியாக பட்டாசு வெடிப்பதை அனுமதிக்கக் கூடாது எனவும்,
பட்டாசு வெடிக்கும் போது அருகாமையில் தண்ணீர் வைத்திருக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுவாசக் கோளாறு உள்ளவர்கள் வெளியில் செல்வதைத் தவிர்க்க வேண்டும்
எனவும், வெற்றுக்கைகளால் பட்டாசு கொளுத்தக்கூடாது எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
முழுவதும் வெடிக்காத பட்டாசுகளை தண்ணீர் ஊற்றி உடனடியாக அணைக்க வேண்டும். மற்றும் மின் கம்பங்களுக்கு அருகே, பட்டாசுகளை வெடிக்க கூடாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சானிடைசர் பயன்படுத்திவிட்டு பட்டாசு வெடிக்கக் கூடாது எனவும், பட்டாசு விபத்துக்களை தவிர்த்து, பாதுகாப்புடன் தீபாவளியை கொண்டாடவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.







