செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியிலிருந்து நீக்க ஆளுநர் உத்தரவு? -தலைவர்கள் கண்டனம்…

அமைச்சரவையில் இருந்து செந்தில் பாலாஜியை ஆளுநர் நீக்கம் செய்த நடவடிக்கைக்கு பல்வேறு கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். தமிழ்நாடு ஆளுநரின் நடவடிக்கை இந்திய அரசியலமைப்புச் சட்டம் எந்த அளவுக்குப் புதைக்கப்பட்டுள்ளது என்பதை காட்டுவதாக மார்க்சிஸ்ட்…

அமைச்சரவையில் இருந்து செந்தில் பாலாஜியை ஆளுநர் நீக்கம் செய்த நடவடிக்கைக்கு பல்வேறு கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

தமிழ்நாடு ஆளுநரின் நடவடிக்கை இந்திய அரசியலமைப்புச் சட்டம் எந்த அளவுக்குப் புதைக்கப்பட்டுள்ளது என்பதை காட்டுவதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி தெரிவித்துள்ளார். நமது மதச்சார்பற்ற ஜனநாயகக் குடியரசை அழிக்கும், மோடி அரசு தோற்கடிக்கப்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

செந்தில்பாலாஜியை அமைச்சரவையில் இருந்து நீக்கம் செய்திருப்பதாக ஆளுநர் அறிவித்திருப்பது அனைத்து எல்லைகளையும் தாண்டி ஆபத்தான சூழலை உருவாக்கும் வன்மம் கொண்ட செயல் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார். சட்டத்திற்கு மேலாக தன்னை நிறுத்திக் கொண்டு, எல்லையில்லா அதிகாரம் கொண்டவராக கருதி ஆளுநர் செயல்படுவது தமிழ்நாட்டின் அமைதி வாழ்வை சீர்குலைக்கும் அரசியல் சதி விளையாட்டு என்றும் தமது அறிக்கையில் முத்தரசன் கூறியுள்ளார்.

ஆளுநரின் நடவடிக்கை செந்தில் பாலாஜிக்கு எதிரானதல்ல, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சீண்டி வம்புக்கு இழுக்கும் சேட்டை என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் அரசியல் குழப்பத்தை உருவாக்க ஆளுநர் நினைக்கிறாரா? என்று கேள்வி எழுப்பி உள்ள திருமாவளவன், அவரது தான்தோன்றித் தனமான போக்கை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வன்மையாகக் கண்டிப்பதாக தமது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

செந்தில் பாலாஜி மீதான ஊழல் வழக்குகள் நேர்மையாக நடைபெற வேண்டும் என்பதிலோ, சட்டத்தின்படி அவர் தண்டிக்கப்பட வேண்டும் என்பதிலோ மாற்றுக்கருத்தில்லை என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். ஆனால், அதனைக் காரணமாகக் காட்டி, மாநில அரசின் இறையாண்மை மீது தாக்குதல் தொடுக்கும் ஆளுநரின் நடவடிக்கையை ஒருபோதும் ஏற்க முடியாது, அரசின் நிர்வாக முடிவை மாற்றி அமைக்க அவர் முற்படுவது அப்பட்டமான சட்டவிரோதமாகும் என்றும் தமது அறிக்கையில் சீமான் கூறியுள்ளார்.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.