ஆளுநர் அரசியல் பேசக்கூடாது, தனது கடமையை மட்டுமே செய்ய வேண்டும்: அண்ணாமலை பேட்டி!

தமிழ்நாடு ஆளுநர் அரசியல்வாதி இல்லை, அவர் அரசியல் பேசக்கூடாது, அவரது கடமையை மட்டும்தான் செய்ய வேண்டும் என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் ஸ்ரீராம் அறக்கட்டளை சார்பில் 39…

தமிழ்நாடு ஆளுநர் அரசியல்வாதி இல்லை, அவர் அரசியல் பேசக்கூடாது, அவரது கடமையை மட்டும்தான் செய்ய வேண்டும் என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் ஸ்ரீராம் அறக்கட்டளை சார்பில் 39 ஜோடிகளுக்கு திருமணம் நடத்தி வைக்கப்பட்டது. பிஜேபி மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு மணமக்களுக்கு தாலி எடுத்து கொடுத்து திருமணத்தை நடத்தி வைத்து மணமக்களை வாழ்த்தினார்

அதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை கூறியதாவது:

“ஒவ்வொரு கட்சிக்கும் ஒரு கொள்கை. கொள்கை அளவில் பாஜகவுக்கும் அதிமுகவுக்கும் இடையே முரண்பாடுகள் உள்ளன. அதேநேரத்தில் பொது சிவில் சட்டம் என்பதற்கு அனைவருக்கும் நன்மைத் தரக்கூடியது. சிறுபான்மையினருக்கும் நன்மைத் தரக்கூடியது. இது அனைவரையும் இணைப்பதற்கான சட்டம், பிரிப்பதற்கானது அல்ல. கருத்து வேறுபாடுகளை கடந்து அனைத்துக் கட்சிகளும் இணைந்து பொது சிவில் சட்டத்தை கொண்டுவர வேண்டும்.

கர்நாடக மாநிலத்தில் மேகதாதுவில் காவிரியின் குறுக்கே தமிழ்நாட்டின் அனுமதியில்லாமல் அணையை கட்டிவிட முடியாது. கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் தமிழ்நாட்டிற்கு தண்ணீர் தரமுடியாது எனக் கூறியுள்ளார். ஆனால் காங்கிரஸ் கூட்டணியில் உள்ள தமிழ்நாடு அரசு இதற்கு கண்டனம் தெரிவிக்கவில்லை. மக்களின் நலன் சார்ந்த அரசாக திமுக செயல்படவில்லை.

தமிழ்நாடு ஆளுநர் அரசியல்வாதி இல்லை. எல்லாவற்றுக்கும் அவர் பதிலளிக்க முடியாது. ஆளுநர் அரசியல் பேசக்கூடாது, ஆளுநர் அவரது கடமையை மட்டும்தான் செய்ய வேண்டும். ஆளுநர், பத்திரிகையாளர்களை சந்திப்பதை தவிர்ப்பதுதான் சரி.

தக்காளி, வெங்காயம் போன்றவைகள் பருவக் காலங்களில் விளையக்கூடியவை. அவற்றின் பதுக்கல் மற்றும் ஏற்றுமதியை தடுக்க வேண்டும். விவசாய சட்டத்தைக் கொண்டு வருவதன் மூலமே விலையேற்றத்துக்குத் தீர்வு காண முடியும்” இவ்வாறு அண்ணாமலை தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.