தமிழ்நாடு வந்துள்ள இலங்கை கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை சந்தித்தார்.
இலங்கை கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் சென்னையில் கடந்த 2 நாட்களுக்கு முன் நியூஸ் 7 தமிழுக்கு பிரத்யேக பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்கள் விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படும். ஓரிரு ஆண்டுகளில் இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி நீங்கி பழையை நிலை திரும்பும். பொருளாதார நெருக்கடியை சீரமைக்க அதிபர் ரணில் விக்ரமசிங்கே போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்து வருகிறார். பொருளாதார மந்த நிலையின் போது தமிழக முதலமைச்சர் செய்த உதவிகளை இலங்கை தமிழ் மக்கள் அவ்வளவு எளிதில் மறக்க மாட்டார்கள்.
மேலும் இலங்கை தமிழர்கள் மீது அதீதமான பற்று கொண்டவர் மறைந்த முதலமைச்சரும், திமுக தலைவருமான கருணாநிதி. அவர் இலங்கை மக்களுக்காக ஏராளமான நல்ல திட்டங்களை கொண்டு வந்தார். தமிழ்நாட்டை போலவே இலங்கை கிழக்கு மாகாணத்தில் கருணாநிதியின் பிறந்தநாள் அரசு விழாவாக பல்வேறு நிகழ்ச்சிகளுடன் சிறப்பாக கொண்டாடப்படும் என்று கூறியிருந்தார்.
இந்நிலையில், இன்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை செந்தில் தொண்டமான் சந்தித்தார். இது குறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:
தமிழ்நாடு வருகை தந்துள்ள இலங்கை கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான், இன்று நம்மை மரியாதை நிமித்தமாக சந்தித்துப் பேசினார்கள். இலங்கையில் தற்போது நிலவுகிற சூழல், வட கிழக்கு & மலையகத் தமிழர்களின் நிலை, தமிழ்நாடு – இலங்கை உறவு என பல்வேறு அம்சங்களை இந்தச் சந்திப்பின் போது கலந்துரையாடினோம். செந்தில் தொண்டமானுக்கு என் அன்பும், நன்றியும் என்று அமைச்சர் உதயநிதிஸ்டாலின் தெரிவித்துள்ளார்.







