அரசியலமைப்பு சட்டத்தை மீறும் ஆளுனரை திரும்ப பெற வேண்டும் எனவும் முதலமைச்சருக்கு நெருக்கடி தரும் பாஜக அரசின் சதியை ஜனநாயக சக்திகள்
ஒன்றிணைந்து முறியடிப்போம் என திருமாவளவன் எம்.பி தெரிவித்துள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் விசிக தலைவர் திருமாவளவன் எம்பி செய்தியாளர்களை சந்தித்தார். அவர் தெரிவித்ததாவது..
”அமைச்சர் செந்தில்பாலாஜி வகித்து வந்த துறையை வேறு அமைச்சர்களுக்கு ஒதுக்கி முதலமைச்சர் ஆளுநருக்கு பரிந்துரை செய்து உள்ளார். அதை திருப்பி அனுப்பியதுடன் ஆளுநர் விமர்சனம் செய்து உள்ளார். அரசியலமைப்பு சட்டத்தின் படி இயங்க கூடிய பொறுப்பில் இருக்க கூடியவர் ஆர்.எஸ்.எஸ். தொண்டரை போல் திரும்ப திரும்ப செய்து வருகிறார்.
அவரது அணுகுமுறை அதிர்ச்சி அளிக்கிறது. அரசியலமைப்பு சட்டத்திற்கு
எதிரான போக்கை கண்டிக்கிறது. ஆளுனர் மாளிகை ஆர்.எஸ்.எஸ். அலுவலகம் போல் இயங்கி கொண்டு இருக்கிறது. சனாதன சக்திகள் சங்பரிவார் அமைப்புகள் குவியும் இடமாக ஆளுநர் மாளிகையை மாற்றி இருக்கிறார். இந்த போக்கு ஆபத்தானது.
அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிராக தொடர்ந்து செயல்படும் ஆளுநரை திரும்ப பெற வேண்டும் என ஒன்றிய அரசுக்கு வலியுறுத்துகிறது. பா.ஜ.க. ஆளாத மாநிலங்களில் நெருக்கடி தருவதை இந்திய அரசு வாடிக்கையாக கொண்டு உள்ளது. தெலங்கானா, மேற்கு வங்கம், டெல்லி, மகாராஷ்ட்டிர மாநிலத்தை தொடர்ந்து தமிழகத்தில். பா.ஜ.க.வை எதிர்த்து அரசியல் செய்ய கூடிய மாநில அரசுகளை அச்சுறுத்த கூடிய வகையில் போக்கு அமைந்து உள்ளது.
ஆளுநரின் இந்த நடவடிக்கை செந்தில் பாலாஜி மீது எடுக்கப்பட்ட சட்டப்பூர்வ நடவடிக்கை என்பதை விட தமிழ்நாடு முதலமைச்சருக்கு வைத்து உள்ள செக்மேட். தமிழ்நாடு முதல்வருக்கு நெருக்கடி ஏற்படுத்துகின்றார்கள். இதை ஜனநாயக சக்திகள்
ஒன்றிணைந்து முறியடிப்போம் என திருமாவளவன் எம்பி தெரிவித்துள்ளார்.







