மாணவர்களின் தொடர் போராட்டத்தால் கட்டணத்தைக் குறைத்தது அரசு!

ஈரோடு பெருந்துறை மருத்துவக் கல்லூரியில் கட்டணம் குறைக்கப்படும் என்றும் பிற அரசு மருத்துவக் கல்லூரியில் உள்ள கட்டண நடைமுறையே இங்கு பின்பற்றப்படும் என்றும் சுகாதாரத்துறை தற்போது அறிவித்துள்ளது. பெருந்துறையில் போக்குவரத்துத் துறையின் கீழ் மருத்துவக்…

ஈரோடு பெருந்துறை மருத்துவக் கல்லூரியில் கட்டணம் குறைக்கப்படும் என்றும் பிற அரசு மருத்துவக் கல்லூரியில் உள்ள கட்டண நடைமுறையே இங்கு பின்பற்றப்படும் என்றும் சுகாதாரத்துறை தற்போது அறிவித்துள்ளது.

பெருந்துறையில் போக்குவரத்துத் துறையின் கீழ் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை, அரசு உதவி பெறும் கல்லூரியாக 1992-ம் ஆண்டு முதல் செயல்பட்டு வந்தது. இந்தக் கல்லூரியைக் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் சுகாதாரத் துறையின் கீழ் இயங்கும் ஈரோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையாக மாற்றி தமிழக அரசு உத்தரவிட்டது.

இதற்கிடையே அரசு மருத்துவக் கல்லூரியாக அறிவிக்கப்பட்டு, 2020-ல் அரசாணை வெளியிட்ட பிறகும் இங்கு கல்விக் கட்டணமாக ரூ.4 லட்சத்து 11 ஆயிரம் வசூலிக்கப்படுகிறது. ஆனால், அரசுக் கல்லூரியில் வசூலிக்கும் ரூ.13 ஆயிரத்து 610 மட்டுமே கல்விக் கட்டணமாகக் கல்லூரி நிர்வாகம் வசூலிக்க வேண்டும் என மாணவ, மாணவியர் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில் தற்போது பெருந்துறை மருத்துவக் கல்லூரியில் கட்டணம் குறைக்கப்படும் என்றும் பிற அரசு மருத்துவக் கல்லூரியில் உள்ள கட்டண நடைமுறையே இங்கு பின்பற்றப்படும் என்றும் சுகாதாரத்துறை தற்போது அறிவித்துள்ளது. அரசின் இந்த அறிவிப்பை மாணவர்கள் பட்டாசு வெடித்து வரவேற்றுள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.