புதுச்சேரியில் தற்போது மழைக் காலத்தால் பரவும் வைரஸ் காய்ச்சலுக்கு சிகிச்சை அளிக்க புதுச்சேரி, காரைக்கால், மாகி, மற்றும் ஏனாம் பிராந்தியத்தில் உள்ள அரசு பொது மருத்துவமனைகளிலும் பிரத்தியேக வெளிப்புற சிகிச்சை, உள்புற சிகிச்சை வரட்டு அமைக்கப்பட்டுள்ளது என்று புதுச்சேரி சுகாதாரத் துறை இயக்குநர் ஸ்ரீராமுலு தெரிவித்தார்.
புதுச்சேரியில் மழைக் காலத்தில் பொதுவாக பரவும் வைரஸ் காய்ச்சல் (ஃப்ளூ) தற்போது பரவி வருகிறது. கொரோனா பெருந் தொற்று ஊரடங்கு காரணமாக மக்கள் நடமாட்டம் குறைந்து காணப்பட்டதால் கடந்த 2 வருடங்களாக பரவக் கூடிய மழைக்கால காய்ச்சல் குறைவாக இருந்தது.
தற்போது கொரோனா பெருந் தொற்று குறைந்துள்ள நிலையில் மக்கள் முக கவசம் அணியாமலும், தனிமனித இடைவெளி கடை பிடிக்காமலும், கூட்ட நெரிசல்களில் செல்வதாலும் இந்த மழைக் காலத்தில் பரவும் சாதாரண வைரஸ் காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது.
இந்நிலையை சமாளிக்க புதுச்சேரி சுகாதாரத் துறை புதுச்சேரி, காரைக்கால், மாகி, மற்றும் ஏனத்திலுள்ள அரசு பொது மருத்துவமனைகளிலும், இந்திரா காந்தி மருத்துவ கல்லூரியிலும், ராஜீவ் காந்தி அரசு மகளிர் மற்றும் குழந்தைகள் மருத்துவமனையிலும் காய்ச்சலுக்கான பிரத்யேக வெளிப்புற சிகிச்சையும், உள்புற சிகிச்சை வார்டும் 24 மணி நேரமும் இயங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
காய்ச்சலுக்கான இப்பிரதேச சிகிச்சைக்காக போதுமான மருத்துவர்களும், மருந்துகளும் அனைத்து மருத்துவமனைகளிலும் இருப்பதை உறுதி செய்துள்ளது. அதுமட்டுமின்றி அனைத்து ஆரம்ப சுகாதார மையங்களிலும் காய்ச்சலுக்கான பிரத்யேக வெளிப்புற சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. மழைக் காலத்தில் பரவும் டெங்கு காய்ச்சலை தடுக்க முன்களப் பணியாளர்கள் முடுக்கி விடப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், புதுச்சேரி மக்கள் காய்ச்சிய குடிநீரை அருந்தும் படியும், முக கவசம் அணியும்படியும், தனி மனித இடைவெளி எப்பொழுதும் கடைப்பிடிக்க வேண்டும் என்றும், வீட்டில் காய்ச்சல் நோயாளி யாரேனும் இருந்தால் அந்நோயாளி கண்டிப்பாக முகக்கவசம் அணியவும், தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும், கூட்டங்களில் செல்வதை தவிர்க்க வேண்டும் என்றும், வெளிப்புற உணவுகளை மக்கள் தவிர்க்க வேண்டும், வீட்டைச்சுற்றி மழை தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.
இம்மழைக் காலத்தில் பரவக் கூடிய வைரஸ் காய்ச்சலுக்காக மக்கள் யாரும் பயப்பட வேண்டாம் என்றும், உரிய சிகிச்சை எடுத்துக் கொண்டால் இக்காய்ச்சலில் இருந்து விடுபடலாம் என்றும் புதுச்சேரி சுகாதார இயக்குனர் டாக்டர் ஸ்ரீராமுலு தெரிவித்தார்.








