உச்சநீதிமன்ற புதிய நீதிபதிகள்; மத்திய அரசு ஒப்புதல்

உச்சநீதிமன்றத்தில் காலியாக உள்ள நீதிபதிகள் பணியிடங்களை நிரப்புவதற்கு நீதிமன்ற கொலீஜியம் பரிந்துரைத்த 9 பேரின் பெயர்களுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. உச்சநீதிமன்றத்தில் மொத்த நீதிபதிகளின் எண்ணிக்கையானது 34 ஆக உள்ள நிலையில், தற்போது…

உச்சநீதிமன்றத்தில் காலியாக உள்ள நீதிபதிகள் பணியிடங்களை நிரப்புவதற்கு நீதிமன்ற கொலீஜியம் பரிந்துரைத்த 9 பேரின் பெயர்களுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

உச்சநீதிமன்றத்தில் மொத்த நீதிபதிகளின் எண்ணிக்கையானது 34 ஆக உள்ள நிலையில், தற்போது 24 நீதிபதிகள் மட்டுமே பணியாற்றி வருகின்றனர். கடந்த 2019ல் நீதிபதி ரஞ்சன் கோகோய் ஓய்வு பெற்றதையடுத்து வேறு எந்த நியமனமும் நடைபெறவில்லை. இந்நிலையில், நீதிபதி என்.வி.ரமணா தலைமையில் யு.யு.லலீத், ஏ.எம்.கான்வில்கர், டி.ஒய்.சந்திரசூட், எல்.நாகேஸ்வர ராவ் ஆகியோரைக் கொண்ட கொலீஜியம் அமைப்பானது 3 பெண் நீதிபதிகள் உட்பட 9 பேரின் பெயர்களை உச்சநீதிமன்ற நீதிபதிக்காக பரிந்துரைத்தது.

இது குறித்த அறிவிப்பில், “கர்நாடக உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அபை ஸ்ரீநிவாஸ் ஒகா, குஜராத் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி விக்ரம் நாத், சிக்கிம் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஜிதேந்திர குமார் மகேஷ்வரி, தெலங்கானா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஹிமா கோலி, கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதி பி.வி.நாகர்த்தனா, கேரள உயர்நீதிமன்ற நீதிபதி சி.டி.ரவிகுமார், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ், குஜராத் உயர்நீதிமன்ற நீதிபதி பெலா திரிவேதி ஆகியோரின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.” என தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும், உச்சநீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத்திலிருந்து நேரடி நியமன அடிப்படையில், மூத்த வழக்கறிஞரும், முன்னாள் அரசு கூடுதல் வழக்கறிஞருமான பி.எஸ்.நரசிம்மாவின் பெயரும் பரிந்துரைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் இந்த பரிந்துரைக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. தொடர்ந்து இந்த பட்டியல் குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. உச்சநீதிமன்ற நீதிபதி பணியிடத்துக்கு பரிந்துரைக்கப்பட்ட பெண் நீதிபதிகளில் ஒருவரான நீதிபதி பி.வி.நாகர்த்தனா உச்சநீதிமன்றத்தின் முதல் பெண் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாக நீதித்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.