சமூக வலைத்தளங்களில் விமர்சித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மிரட்டும் வகையில் தமிழிசை சௌந்தரராஜன் கூறிய கருத்தை திரும்பப்பெற வேண்டும் என புதுச்சேரி சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் சிவா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய புதுச்சேரி சட்டமன்ற எதிர்கட்சி
தலைவரும், மாநில திமுக அமைப்பாளருமான சிவா, மத்தியில் பாஜக அரசு
பொறுப்பேற்றதிலிருந்து ஜனநாயகம், பத்திரிக்கை சுதந்திரம் முழுமையாக
பறிக்கப்பட்டு, பேச்சுரிமை மறுக்கப்பட்டிருக்கிறது என்பது நாடறிந்த விஷயம் என
கூறினார்.
அதனை உறுதிப்படுத்தும் வகையில் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை
சௌந்தரராஜன் அரசு விழா ஒன்றில் சமூக வலைதளங்களில் விமர்சனம் செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியுள்ளார். இது ஏற்றுக் கொள்ள முடியாத
விஷயம், ஜனநாயகத்தில் பேச்சுரிமை, கருத்துரிமை, எழுத்துரிமை என்பது
அனைவருக்கும் பொதுவானது என கூறினார்.

அரசியல்வாதிகளாக இருக்கட்டும், சமூகத்தில் நல்ல அந்தஸ்தில் உடையவர்களாக
இருக்கட்டும் விமர்சனங்களை சகிப்புத்தன்மையுடன் ஏற்றுக் கொள்ளக்கூடிய மன
நிலையுடன் இருக்க வேண்டும் என தெரிவித்தார். தமிழக முதல்வரை கூட பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்தவர்கள் கடுமையாக முறையற்ற முறையில் விமர்சிக்கின்றனர் என கூறினார்.
ஆனால் ஒரு நாளும் அவர் விமர்சனம் செய்தவர்களை கடிந்து பேசாமல் புன்முறுவலுடன் ஏற்றுக்கொண்டு அதில் உள்ள விஷயங்களை ஏற்று பெருந்தன்மையுடன் அரசியல் செய்து கொண்டிருக்கிறார். ஆனால் புதுச்சேரியில் இருக்கக்கூடிய துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர் இல்லை. நியமிக்கப்பட்டவர். இவர் மக்களால் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளவர்களுக்குப் புத்தி கூறுகிறார். மிரட்டுகிறார் என கூறினார்.

இந்த ஆட்சி அதிகாரம் மற்றும் மிரட்டலை கண்டு பயப்படுபவர் தான் இல்லை என்றும்,
இது போன்று அவர் தொடர்ந்து செயல்பட்டால் விமர்சனங்கள் தொடர்ந்து அதிகரிக்கும்
எனவும் தெரிவித்தார். ஜனநாயகத்தில் இதுபோன்று பேசிய யாரும் பெரிய அளவில்
நிலைத்து நின்றதில்லை என்று கூறிய எதிர்கட்சி தலைவர் சிவா, துணைநிலை ஆளுநர்
தமிழிசை செளந்தரராஜன் தன்னுடைய கருத்தை திரும்ப பெற வேண்டும் எனவும் கேட்டுக்
கொண்டார்.
மேலும் ஜனநாயக நாட்டில் அதிகார உற்சவரம்பை பயன்படுத்தி இதுபோன்று பேசுவதை
திமுக ஒரு காலமும் ஏற்றுக் கொள்ளாது எனவும் அவர் தெரிவித்தார்.







