தகைசால் தமிழருக்கு பிரியாவிடை: 30 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் சங்கரய்யாவின் உடல் தகனம்!

சென்னை பெசன்ட் நகர் மின்மயானத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவர் சங்கரய்யாவின் உடல் 30 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது. சுதந்திரப் போராட்ட வீரரும்,  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த…

சென்னை பெசன்ட் நகர் மின்மயானத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவர் சங்கரய்யாவின் உடல் 30 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.

சுதந்திரப் போராட்ட வீரரும்,  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான தோழர் சங்கரய்யா நேற்று காலை சென்னை பசுமைவழிச்சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் உடல்நிலை குறைவு காரணமாக உயிரிழந்தார்.

அவரது உடல் குரோம்பேட்டையில் உள்ள அவரது இல்லத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.  பின்னர் தியாகராய நகரில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்திற்கு பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.  மார்க்ச்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி உள்ளிட்ட தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர்.

தொடர்ந்து,  சங்கரய்யாவின் உடலுக்கு அமைச்சர் மா சுப்பிரமணியன்,  மதிமுக பொதுச் செயலாளர் வைகோ,  திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் டி ஆர் பாலு,  காங்கிரஸ்  எம்எல்ஏ ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், நடிகர் சத்யராஜ்,  பத்திரிகையாளர் நக்கீரன் கோபால்,  நடிகை சி ஆர் சரஸ்வதி,  நடிகர் பார்த்திபன், நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் உள்ளிட்ட தலைவர்கள் இன்று காலை அஞ்சலி செலுத்தினர்.

இதனைத் தொடர்ந்து சங்கரய்யாவின் இறுதி ஊர்வலம் நடைபெற்றது.  இந்த நிகழ்வில் மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி,  அரசியல் தலைமைக் குழு உறுப்பினர்கள் பிரகாஷ் காரத்,  ஜி.ராமகிருஷ்ணன்,  திமுக எம்பி ஆ.ராசா,  திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி,  பத்திரிகையாளர் என்.ராம்,  பல்லாவரம் தொகுதி எம்.எல்.ஏ கருணாநிதி மற்றும் ஆயிரகணக்கான தொண்டர்கள் பங்கேற்றனர்.

தொடர்ந்து பெசன்ட் நகர்  மின்மயானத்தில் சங்கரய்யாவின் உடல் எடுத்துச் செல்லப்பட்டது.  இதன் பின்னர் ஆயுதப் படை வீரர்களின் மரியாதையுடன் 30 குண்டுகள் முழங்க அரசு மரியாதை செலுத்தப்பட்டது.

இறுதி நிகழ்வில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் எம்பி,  நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.  இதன் பின்னர் சங்கரய்யாவிற்கு இறுதி மரியாதை செலுதப்பட்ட பிறகு அவரது உடல் பெசண்ட் நகர் மின்மயானத்தில் வைத்து தகனம் செய்யப்பட்டது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.