புனித வெள்ளியையொட்டி வேளாங்கண்ணி ஆலயத்தில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. மேலும் கிறிஸ்தவ ஆலயங்களில் சிலுவையை சுமந்து சிலுவை பாதை ஊர்வலம் சென்று பிரார்த்தனை செய்தனர்.
ஏசு மனித குலம் முழுவதையும் பாவத்திலிருந்து மீட்பதற்காகவும், இறைவாழ்வை மனிதருக்கு அளிப்பதற்காகவும் துன்பங்கள் பல அனுபவித்து சிலுவையில் இறந்தார் என்பது கிறிஸ்தவர்களின் நம்பிக்கை. புனித வெள்ளி, பெரிய வெள்ளி அல்லது ஆண்டவருடைய திருப்பாடுகளின் வெள்ளி என்பது ஏசு கிறிஸ்து அனுபவித்த துன்பங்களையும், சிலுவையில் இறந்து, மீண்டும் உயிர்த்தெழுந்ததையும் நினைவுகூர்ந்து ஒவ்வொரு ஆண்டும் கிறிஸ்தவர்களால் அனுசரிக்கப்படும் நிகழ்வாகும்.
கிறிஸ்தவ வழிபாட்டில் முக்கியமான புனித வெள்ளி நாள் ஏசு உயிர்பெற்றெழுந்த ஞாயிறு (ஈஸ்டர்) கொண்டாட்டத்துக்கு முந்தைய வெள்ளிக்கிழமை அனுசரிக்கப்படுகிறது. ஏசு கல்வாரி மலையில் சிலுவையில் அறையப்பட்டதை நினைவுகூர்கின்ற இந்த புனித வெள்ளி அன்று கிறிஸ்தவ ஆலயங்களில் சிறப்பு ஆராதனை நிகழ்ச்சிகள் நடைபெறுவது வழக்கம்.
அதன்படி நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் உள்ள உலகப்பிரசித்திப்பெற்ற புனித ஆரோக்கியமாதா பேராலயத்தில் புனித வெள்ளி சிறப்பு ஆராதனை நிகழ்ச்சி இன்று விமரிசையாக நடைபெற்றது.
இதேபோல் சென்னையில் பிரசித்தி பெற்ற சாந்தோம் ஆலயம் உள்ளிட்ட மாநிலத்தில் பல்வேறு பகுதிகளிலும் இன்று புனித வெள்ளியை முன்னிட்டு தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை மற்றும், சிலுவையை ஏந்திக் கொண்டு கிறிஸ்தவர்கள் சிலுபை பாதை ஊர்வலம் சென்றனர்.








