தேவர் ஜெயந்தி, குருபூஜை – பிரதமர் மோடி புகழாரம்!

தேவர் ஜெயந்தி மற்றும் குருபூஜையை முன்னிட்டு முத்துராமலிங்கர் குறித்து பிரதமர் மோடி புகழாரம் சூட்டியுள்ளார்.

ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் முத்துராமலிங்க தேவர் 118-வது ஜெயந்தி மற்றும் 63-வது குருபூஜை விழா இன்று அனுசரிக்கப்படுகிறது. ஒவ்வொரு வருடமும் அக்டோபர் 30ம் தேதி பசும்பொன்னில் அமைந்துள்ள முத்துராமலிங்க தேவரின் நினைவிடத்தில் அரசியல் கட்சித் தலைவர்கள் உள்ளிட்ட பலரும் மரியாதை செலுத்துவது வழக்கம். அந்த வகையில், முத்துராமலிங்க தேவரின் குருபூஜையை முன்னிட்டு, பசும்பொன்னில் அமைந்துள்ள அவரது நினைவிடத்தில் அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் மரியாதை செலுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், பிரதமர் நரேந்திர மோடி முத்துராமலிங்க தேவர் குறித்து புகழாரம் சூட்டியுள்ளார். இதுகுறித்து அவர் எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது,

“இந்தியாவின் சமூக மற்றும் அரசியல் வாழ்வில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்திய மாபெரும் ஆளுமையான பசும்பொன் முத்துராமலிங்க தேவருக்குப் புனிதமான குரு பூஜையின் போது மனமார்ந்த அஞ்சலி செலுத்துகிறேன். நீதி, சமத்துவம் ஆகியவற்றுக்கும் ஏழைகள் மற்றும் விவசாயிகளின் நலனுக்கும் அவரது அசைக்க முடியாத அர்ப்பணிப்பு அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு ஊக்கமளிக்கிறது. கண்ணியம், ஒற்றுமை மற்றும் சுயமரியாதையின் பக்கம் உறுதியாக நின்ற அவர், சமூக சேவை செய்வதற்குக் கொண்டிருந்த அசைக்க முடியாத உறுதியுடன் ஆழ்ந்த ஆன்மீகத்தை இணைத்தார்”

இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.