சர்வதேச சந்தையில் கோதுமை விலை கிடுகிடு உயர்வு

கோதுமை ஏற்றுமதிக்கு இந்தியா தடை விதித்ததை அடுத்து சர்வதேச சந்தையில் அதன் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. வெயிலின் தாக்கம் நாட்டின் பல பகுதிகளிலும் அதிகரித்து வருவதால் கோதுமை பயிர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றன. இதனால், கோதுமை…

கோதுமை ஏற்றுமதிக்கு இந்தியா தடை விதித்ததை அடுத்து சர்வதேச சந்தையில் அதன் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது.

வெயிலின் தாக்கம் நாட்டின் பல பகுதிகளிலும் அதிகரித்து வருவதால் கோதுமை பயிர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றன. இதனால், கோதுமை உற்பத்தி குறையும் என கணிக்கப்பட்டுள்ளதால், கடந்த வெள்ளிக்கிழமை முதல் கோதுமை ஏற்றுமதிக்கு மத்திய வர்த்தக அமைச்சகம் தடை விதித்தது.

இந்தியாவின் ஏற்றுமதியை நம்பியுள்ள அண்டை நாடுகள், உணவுப் பொருட்கள் தட்டுப்பாட்டால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள ஏழை நாடுகள் தவிர்த்து பிற நாடுகளுக்கு கோதுமை ஏற்றுமதி செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் இந்த நடவடிக்கை காரணமாக சர்வதேச சந்தையில் கோதுமை விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. அமெரிக்காவின் சிகாகோவில் உணவுப் பொருட்களுக்கான விலை குறியீட்டில் கோதுமையின் விலை 5.90% அளவுக்கு உயர்ந்துள்ளது.

உக்ரைனுக்கு எதிரான ரஷ்யாவின் போர் காரணமாக சர்வதேச அளவில் பல்வேறு உணவுப் பொருட்களின் விலைகள் உயர்ந்து வரும் நிலையில், இந்தியாவின் ஏற்றுமதி தடை காரணமாக கோதுமை விலை குறிப்பிடத்தக்க அளவில் உயர்ந்துள்ளது. இந்த ஆண்டு இறுதிக்குள் சர்வதேச சந்தையில் கோதுமை விலை 60% அளவுக்கு உயரும் என கணிக்கப்பட்டுள்ளது.

ஜெர்மனியில் நடைபெற்ற G7 நாடுகளின் மாநாட்டில் பேசிய ஜெர்மனியின் வேளாண் அமைச்சர் செம் ஓஸ்டெமிர், கோதுமை ஏற்றுமதிக்கு இந்தியா தடை விதித்திருப்பதற்கு கண்டனம் தெரிவித்தார். இதுபோல் ஏற்றுமதிக்கு கட்டுப்பாடுகளை விதிப்பது அல்லது ஏற்றுமதியை நிறுத்துவது எனும் சில நாடுகளின் செயல்பாடு காரணமாக சர்வதேச சந்தையில் உணவுப் பொருட்களின் விலை உயர்ந்து வருவதாக அவர் குறிப்பிட்டார்.

கோதுமை உற்பத்தியில் உலகின் 2வது பெரிய நாடு இந்தியா என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.