இந்தியாவை வலிமையான நாடாக மாற்றுவதற்கு ஒன்று சேரும் நோக்கில் அனைவரும் மிஸ்டுகால் கொடுக்குமாறு டெல்லி முதலமைச்சர் அர்விந்த் கெஜ்ரிவால் கேட்டுக்கொண்டுள்ளார்.
டெல்லியில் கலால் வரி விதிப்புக்கான கொள்கை அம்மாநில அரசால் சமீபத்தில் திரும்பப்பெறப்பட்டது. டெல்லியில் உள்ள மது ஆலை முதலாளிகளுக்கு பலன் கிடைக்கும் நோக்கில் மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கை காரணமாக கலால் துறைக்கு பொறுப்பு வகிக்கும் அமைச்சர் மணிஷ் சிசோதியா மிகப் பெரிய பலன் அடைந்ததாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதையடுத்து, அவரது வீடு உள்பட 21 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் இன்று சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள டெல்லி முதலமைச்சர் அர்விந்த் கெஜ்ரிவால், மணிஷ் சிசோதியா மிகச் சிறப்பாக செயல்படக்கூடிய அமைச்சர் என பாராட்டு தெரிவித்துள்ளார்.
சிபிஐ சோதனை குறித்து யாரும் பதற்றப்பட வேண்டாம் என கேட்டுக்கொண்டுள்ள அர்விந்த் கெஜ்ரிவால், அவர்கள் தங்கள் கடமையை செய்யட்டும் என்றார். சிபிஐக்கு உத்தரவிடும் இடத்தில் இருப்பவர்கள் ஆம் ஆத்மிக்கு நெருக்கடி கொடுக்க நினைப்பதாகக் குற்றம் சாட்டியுள்ள கெஜ்ரிவால், அதன் காரணமாகவே இதுபோன்ற சோதனைகள் மேற்கொள்ளப்படுவதாகத் தெரிவித்தார்.
டெல்லியின் கல்வி அமைச்சராக அவர் இருப்பதை சுட்டிக்காட்டியுள்ள அர்விந்த் கெஜ்ரிவால், டெல்லியில் உள்ள அரசு பள்ளிகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள சீர்திருத்தங்கள் தொடர்பாக அமெரிக்காவின் நியூயார்க் டைம்ஸ் பத்திரிகையில் நேற்று முதல் பக்கத்தில் செய்தி வெளியாகி இருப்பதை அந்த வீடியோவில் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் உள்ள அரசு பள்ளிகளின் புகழ் அமெரிக்கா வரை பரவி இருப்பது டெல்லிக்கு மட்டுமல்ல; ஒட்டுமொத்த நாட்டுக்கும் பெருமை என்றும் அவர் கூறியுள்ளார்.
அமெரிக்காவைப் போல் இந்தியாவை வலிமையான; சிறந்த; நெம்பர் ஒன் நாடாக மாற்ற இந்தியர்கள் அனைவரும் ஒருங்கிணைய வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
அனைவரையும் ஒருங்கிணைக்கும் நோக்கில் மிஸ்டுகால் இயக்கத்தை தொடங்குவதாக தெரிவித்துள்ள அர்விந்த் கெஜ்ரிவால், நாட்டு மக்கள் அனைவரும் 9510001000 என்ற எண்ணுக்கு மிஸ்டுகால் கொடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.









