ஆஸ்கர் விருது வென்ற ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தின் ’நாட்டு நாட்டு’ பாடலுக்கு ஜெர்மன் தூதரக அதிகாரிகளும் ஊழியர்களும் இணைந்து நடனமாடிய வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
ராஜமௌலி இயக்கத்தில் ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர் ஆகியோர் நடித்த ஆர்.ஆர்.ஆர். படம் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் மொழிகளில் பான் இந்தியா படமாக வெளியாகி வெற்றி பெற்றது.
இந்த திரைப்படத்தில் இடம் பெற்ற நாட்டு நாட்டு பாடல் பல்வேறு விருதுகளை குவித்தது. கடந்த சில மாதங்களுக்கு முன்னர் சிறந்த ஒரிஜினல் பாடலுக்கான கோல்டன் குளோப் விருதை வென்றது. தொடர்ந்து கடந்த 13ம் தேதி அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்ற 95வது ஆஸ்கர் விழாவில் சிறந்த ஒரிஜினல் பாடலுக்கான ஆஸ்கர் விருதையும் தட்டித் தூக்கியது.
மொழிகளை உடைத்து உலகம் முழுவதும் ரசிகர்களைக் குவித்த ’நாட்டு நாட்டு’ பாடலுக்கு ஏராளமான பிரபலங்களும், மக்களும் ஆடி மகிழ்ந்தனர். நாட்டு நாட்டு பாடலுக்கு, தொழிலதிபர் ஆனந்த் மகிந்த்ரா நடனம் ஆடிய வீடியோ, டெல்லியில் உள்ள தென் கொரிய தூதர் சாங் ஜே போக்குடன் தூதரக ஊழியர்கள் நடனம் ஆடிய வீடியோ, அமெரிக்காவில் ஹோலி கொண்டாட்டத்தின்போது அந்நாட்டு காவல்துறை அதிகாரிகள் நடனம் ஆடிய வீடியோ, இந்திய கிரிக்கெட் வீரர்கள் ரவிச்சந்திரன் அஷ்வின் மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆடிய வீடியோ உள்ளிட்ட ஏராளமான வீடியோக்கள் இணையத்தில் வைரலாகின. BTS-ன் ஜங்கூக், தனது லைவ் வீடியோ ஒன்றில் நாட்டு நாட்டு பாடலைப் பாடி, மென்மையாக நடனமாடியதும் சமூக வலைதளத்தில் வேகமாக பரவியது.
அந்த வகையில், டெல்லியில் மிகவும் பரபரப்பான பகுதியான சாந்தினி சவுக் என்கிற பகுதியில் ஜெர்மன் தூதரக அதிகாரிகளும் ஊழியர்களும் இணைந்து நாட்டு நாட்டு பாடலுக்கு நடனமாடி உள்ளனர். இந்த அசத்தலான நடன வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரல் ஆகி வருகிறது.








