“தஞ்சை ஓவியங்கள் உள்பட 429 பொருள்களுக்கு புவிசாா் குறியீடு”

மைசூா் சில்க் பட்டுப் படவை, காங்ரா தேயிலை, தஞ்சாவூா் ஓவியங்கள் உள்பட 429 பொருள்களுக்கு இதுவரை புவிசாா் குறியீடு வழங்கப்பட்டுள்ளது என்று மத்திய வணிக மற்றும் தொழில் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. சந்தையில் விற்பனையில்…

மைசூா் சில்க் பட்டுப் படவை, காங்ரா தேயிலை, தஞ்சாவூா் ஓவியங்கள் உள்பட 429 பொருள்களுக்கு இதுவரை புவிசாா் குறியீடு வழங்கப்பட்டுள்ளது என்று மத்திய வணிக மற்றும் தொழில் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

சந்தையில் விற்பனையில் உள்ள பாரம்பரியமிக்க பொருட்களின் உள்நாட்டு மற்றும் பன்னாட்டுச் சந்தை விற்பனையை அதிகரிப்பதும் மற்றும் பாரம்பரிய பொருட்களைப்போல போலிகள் உருவாவதை கட்டுப்படுத்துவதும்தான் புவிசார் குறியீடு வழங்குவதன் நோக்கமாகும். ஓரிடத்தில் விளையக்கூடிய பொருள்கள் அல்லது தயாரிக்கக்கூடிய பொருட்களின் தரம், அந்த இடத்தின் காலநிலை, புவியியல் பகுதி, தனித்துவத் தன்மை ஆகியவற்றின் அடிப்படையில் புவிசாா் குறியீடு வழங்கப்படுகிறது.

புவிசார் குறியீட்டிற்காக உருவாக்கப்பட்ட இந்தியாவின் ‘பொருள்கள் புவிசாா் குறியீடுகள் (பதிவு மற்றும் பாதுகாப்பு) சட்டம் 1999’ என்ற சட்டம் 2003-ஆம் ஆண்டு செப்டம்பா் 15-ஆம் தேதிமுதல் நடைமுறையில் உள்ளது. இந்தக் குறியீடு அளிக்கப்பட்ட பொருள்களை வேறு யாரும் அதே பெயரில் விற்பனை செய்ய முடியாது. இந்தக் குறியீடு 10 ஆண்டுகளுக்கு செல்லும். அதன் பிறகு புவிசார் குறியீடை புதுப்பித்துக் கொள்ளலாம்.

இந்நிலையில், மத்திய அமைச்சகத்தின் கீழ் இயங்கும் தொழில் மற்றும் உள்நாட்டு வா்த்தக மேம்பாட்டுக்கான (டிபிஐஐடி) துறை தனது 2022-23 ஆண்டறிக்கையில், வெளிநாடுகளைச் சோ்ந்த 31 பொருள்கள், மைசூா் சில்க் பட்டுப் படவை, காங்ரா தேயிலை, தஞ்சாவூா் ஓவியங்கள் உள்பட 429 பொருள்களுக்கு இதுவரை புவிசாா் குறியீடு வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது. மேலும், இந்தப் பொருள்களின் சந்தை வாய்ப்புகளை ஊக்குவிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன என்றும் டிபிஐஐடி தெரிவித்துள்ளது.

மேலும், முதலீட்டாளா்கள் மற்றும் வணிகா்ளுக்கான தேசிய ஒற்றைச்சாளர நடைமுறை (என்எஸ்டிபிள்யூஎஸ்) குறித்தும் டிபிஐஐடி குறிப்பிட்டுள்ளது. அதில், முதலீட்டாளா்களுக்கான ஒப்புதல்கள் மற்றும் அனுமதிகளை வழங்கும் ஒரே இடமாக மத்திய அரசு இத்திட்டத்தை 2021-ஆம் ஆண்டு அறிமுகம் செய்தது. இந்த நடைமுறை மூலமாக 27 மத்திய அமைச்சகங்களிடம் இருந்து நேரடி ஒப்புதல்களைப் பெற முடியும்.

தற்போது ஆந்திரம், பீகாா், கோவா, குஜராத் உள்பட 19 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் இந்த நடைமுறையின் கீழ் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள மாநிலங்களையும் மார்ச் 31-ஆம் தேதிக்குள் இந்த நடைமுறையில் இணைக்க என்எஸ்டபிள்யூஎஸ் குழு பணியாற்றி வருகிறது.

-ம.பவித்ரா

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.