அதிமுக வேட்பாளர் டாக்டர் சரவணனை ஆதரித்து நடனமாடி வாக்கு சேகரித்த காயத்ரி ரகுராம்!

அதிமுக வேட்பாளர் டாக்டர் சரவணனுக்கு ஆதரவாக மதுரையில் நடிகை காயத்ரி ரகுராம் பொதுமக்களிடையே நடனம் ஆடி வாக்கு சேகரித்தார். நாடு முழுவதும் மக்களவை தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.  தமிழ்நாட்டில் ஏப்ரல் 19-ம் தேதி மக்களவை…

அதிமுக வேட்பாளர் டாக்டர் சரவணனுக்கு ஆதரவாக மதுரையில் நடிகை காயத்ரி
ரகுராம் பொதுமக்களிடையே நடனம் ஆடி வாக்கு சேகரித்தார்.

நாடு முழுவதும் மக்களவை தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.  தமிழ்நாட்டில் ஏப்ரல் 19-ம் தேதி மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஒரே கட்டமாக நடைபெற உள்ளது.  ஜூன் 4-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.  தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகள் கூட்டணி அமைத்து,  வேட்பாளர்களை அறிவித்து,  தேர்தலுக்கான பணிகளில் ஈடுபட்டு வருகின்றன.

வேட்புமனுத் தாக்கல் நிறைவு பெற்ற நிலையில், தேர்தல் பரப்புரையில் அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரம் காட்டி வருகின்றன.  இந்த நிலையில் மதுரை மக்களவைத் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் டாக்டர் சரவணனுக்கு ஆதரவாக மதுரை தெப்பக்குளம் பகுதியில் நடிகை காயத்ரி வாக்கு சேகரிப்பில்  ஈடுபட்டார்.

இந்த நிலையில் நடிகை காயத்ரி ரகுராம் தெப்பக்குளத்தில் நடை பயிற்சி செய்த பெண்கள், முதியவர்களிடம் உரையாடி துண்டு பிரச்சாரம் வழங்கி வாக்கு சேகரித்தார். மேலும் பரதநாட்டியம் ஆடியும், மாலை நேர உணவு கடைகளில் குலோப்ஜாம், சோயா காளான் ஆகியவற்றை செய்து மக்களுக்கு வழங்கியும் பிரச்சாரம் மேற்கொண்டார்.

இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த காயத்ரி ரகுராம் கூறுகையில் “மக்களிடம் பேசி பார்த்த போது மத்திய, மாநில அரசுகளின் மேல் அதிருப்தி உள்ளதை காண முடிகிறது, மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை பணிகளை விரைவுபடுத்த மத்திய, மாநில அரசுகள் எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆனால், அமைச்சர் உதயநிதி ஒரு செங்கலை எடுத்து  காட்டி பிரசாரம் செய்து வருகிறார். இந்த தொகுதி அதிமுக வேட்பாளர் சரவணன் மக்களுக்கு நல்லது செய்வார்” என கூறினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.