“தன்பாலின திருமணம் குற்றம் அல்ல” – பாலிவுட் திரைப்பட இயக்குநர் விவேக் அக்னிஹோத்ரி

தன்பாலின திருமணம்  குற்ற செயல் அல்ல என்றும் இது மனித தேவை தான் என்றும்  பிரபல பாலிவுட் இயக்குநர் விவேக் அக்னிஹோத்ரி தெரிவித்துள்ளார். காஷ்மீர் ஃபைல்ஸ் படத்தின் மூலம் இந்தியா முழுவதும் பிரபலமானவர் விவேக்…

தன்பாலின திருமணம்  குற்ற செயல் அல்ல என்றும் இது மனித தேவை தான் என்றும்  பிரபல பாலிவுட் இயக்குநர் விவேக் அக்னிஹோத்ரி தெரிவித்துள்ளார்.

காஷ்மீர் ஃபைல்ஸ் படத்தின் மூலம் இந்தியா முழுவதும் பிரபலமானவர் விவேக் அக்னிஹோத்ரி. பொதுவாகவே சமூக ஊடகங்களில் ஆக்டிவாக இருக்கக்கூடிய இவர், தன் மனதில் பட்ட கருத்துக்களை எந்த ஒளிவு மறைவும் இன்றி வெளிப்படையாக எப்போதுமே தெரிவிக்க கூடியவர். அந்த வகையில் சமீபகாலமாக நாட்டில் தன்பாலினத் திருமணம் பற்றிய பேச்சுக்கள் பரவலாக இருப்பதால், இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்திருந்த விவேக் ” ஒரே பாலின திருமணம் என்பது நகர்ப்புற உயரடுக்கு கருத்து அல்ல, இது மனித தேவை தான். சிறிய நகரங்கள் மற்றும் கிராமங்களில் இதுவரை பயணம் செய்யாத சிலரால் உருவாக்கப்பட்ட கருத்தியல் சிந்தனை தான் இது.

அதிலும் ஒரே பாலின திருமணம் என்பது ஒரு கருத்து அல்ல, இது ஒரு தேவை, அது ஒரு உரிமை. மேலும் இந்தியா போன்ற முற்போக்கான, வெளிப்படை தன்மையுடைய மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய நகரங்களைக் கொண்ட நாட்டில் ஒரே பாலின திருமணம் என்பது சாதாரணமாக இருக்க வேண்டும், குற்றமாக இருக்கக்கூடாது,” என விவேக் அக்னிஹோத்ரி தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட்,நீதிபதிகள் சஞ்சய் கிஷன் கவுல், எஸ்.ரவீந்திர பட், பி.எஸ்.நரசிம்ஹா மற்றும் ஹிமா கோஹ்லி ஆகியோர் அடங்கிய அரசியல் சாசன அமர்வு முன்பு , நாட்டில் ஓரினச்சேர்க்கையாளர் திருமணங்களை சட்டப்பூர்வமாகச் சரிபார்க்கக் கோரிய மத்திய அரசின் மனு மீதான விசாரணை உச்சநீதிமன்றத்தில் இன்று நடைபெற்றது.

அப்போது ஒரேபாலின திருமண விவகாரம் குறித்து விசாரிக்கும் உச்சநீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்விடம் மத்திய அரசு, ஒரே பாலின திருமணங்களின் சட்ட அங்கீகாரத்துக்கான கோரிக்கை என்பது ஒரு குறிப்பிட்ட நகர்ப்புற மேல்தட்டு வர்க்கத்தின் கருத்து மட்டுமே என்று தெரிவித்துள்ளது. இந்த விவகாரத்தை நீதிமன்றம் சட்ட ரிதீயாக மட்டுமே விசாரிக்காமல் நாடாளுமன்றத்தின் முடிவுக்கு விட்டு விட வேண்டும் என மத்திய அரசு கூறியுள்ளது. சமூக ரிதீயாகவும் சமய ரீதியாகவும் ஒரே பாலின திருமணங்கள் ஏற்றுக் கொள்ளத்தக்கதா என்பதை நாடாளுமன்றமும், மக்களும்தான் விவாதித்து முடிவு எடுக்க வேண்டும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

  • பி. ஜேம்ஸ் லிசா
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.