கள்ளச்சாராய விவகாரம் : நியூஸ்7 தமிழ் கள ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்கள்

கள்ளச்சாராய விவகாரம் தொடர்பாக   நியூஸ்7 தமிழ் நடத்திய கள ஆய்வில்  பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் வம்பா மேடு பகுதியில் விற்பனை செய்யப்பட்ட கள்ளச்சாராயத்தை, எக்கியர்குப்பம் பகுதி மீனவர்கள் அருந்தியுள்ளனர்.…

கள்ளச்சாராய விவகாரம் தொடர்பாக   நியூஸ்7 தமிழ் நடத்திய கள ஆய்வில்  பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் வம்பா மேடு பகுதியில் விற்பனை செய்யப்பட்ட கள்ளச்சாராயத்தை, எக்கியர்குப்பம் பகுதி மீனவர்கள் அருந்தியுள்ளனர். இதனையடுத்து மீனவர்கள் மயங்கி விழுந்து உயிருக்கு போராடியுள்ளனர்.  அவர்களை அப்பகுதி மக்கள் மீட்டு புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சேர்த்தனர்.

இதில் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தோர் எண்ணிக்கை இன்று பகல் 12மணி அளவில் 9 ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தவர்களின் உடலுக்கு அமைச்சர்கள் பொன்முடி, செஞ்சி மஸ்தான்  ஆகியோர் அஞ்சலி செலுத்தினர். இந்த விவகாரத்தில் கள்ள சாராய வியாபாரிகள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் பழனி உறுதியளித்துள்ளார்.

இதுவரை கள்ளச்சாராய விற்பனையில் ஈடுபட்ட 10-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தலைமறைவாக உள்ளவர்களை கைது செய்ய 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.

உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை நேரில் சந்திப்பதற்காக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விழுப்புரத்திற்கு விரைந்துள்ளார். இந்த நிலையில் சம்பவம் நடைபெற்ற மரக்காணம் பகுதியில் நியூஸ் 7 தமிழ் கள ஆய்வு நடத்தியது. இதில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதன்படி கள்ளச்சாராயத்தை விற்றவர்கள் இரண்டு வெவ்வேறு சமூகத்தினருக்கு தனித்தனியாக கள்ளச் சாரயம் விற்றது தெரிய வந்துள்ளது. மேலும் விற்பனையிலும் சாதி பார்க்கப்பட்டது நியூஸ் 7 தமிழின் கள ஆய்வில் அம்பலமாகியுள்ளது.

அதேபோல கள்ளச்சாரயத்தை விற்பனை செய்தவர்கள் சாராய பாக்கெட்டுக்களை படகின் மூலம் கொண்டு வந்தது தெரிய வந்துள்ளது. ஆதிக்க சாதியினர் மற்றும் பட்டியல் சாதியினர் தனித்தனியாக குடிப்பதற்கு இடங்களை ஏற்படுத்தி குடித்துள்ளனர். மேலும் கள்ளச் சாராயம் விற்பனை செய்வதற்கு ஏலத்தின் மூலம் முடிவு செய்யப்பட்டுள்ளது கள ஆய்வின் மூலம் அம்பலமாகியுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.