நடிகர் சூர்யா நடித்த “கங்குவா” திரைப்படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் துவங்க உள்ளது. இதற்காக, நடிகர் சூர்யா அங்கு சென்றுள்ளார்.
தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரமான சூர்யாவின் நடிப்பில் சமீபகாலமாக வெளி வந்த எதற்கும் துணிந்தவன், ஜெய் பீம், சூரரைப் போற்று உள்ளிட்ட படங்கள் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றன. இந்நிலையில், சிறுத்தை சிவா இயக்கத்தில் கங்குவா என்னும் படத்தில் நடிகர் சூர்யா தற்போது நடித்துவருகிறார்.
ஸ்டுடியோ க்ரீன் தயாரிப்பில் உருவாக்கும் இப்படத்தில் பாலிவுட் நடிகை திஷா பதானி, யோகி பாபு, கிங்ஸ்லி, கோவை சரளா, ஆனந்த் ராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். சுமார் பத்துக்கும் மேற்பட்ட மொழிகளில் உருவாகி வரும் இந்த படத்திற்கு தேவிஸ்ரீபிரசாத் இசையமைக்கிறார். படத்தின் படப்பிடிப்பு கொடைக்கானலில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இப்படம் பான் இந்தியா படமாக வெளியாக உள்ளது. பல கதாபாத்திரத்தில் நடிப்பதாக சொல்லப்படும் சூர்யா இந்த படத்தின் பிளாஷ்பேக் காட்சிகளுக்காக உடல் எடையை ஏற்றி இருக்கிறார். சமீபத்தில் இவர் உடற்பயிற்சி செய்யும் புகைப்படம் மற்றும் வீடியோ வெளியாகி வைரலானது. இதன் ஓடிடி உரிமையை அமேசான் பிரைம் நிறுவனம் ரூ.80 கோடிக்கு வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகியிருந்தது.
கடந்த ஜூலை 23-ம் தேதி நடிகர் சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு கங்குவா படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியானது. இந்த வீடியோ வெளியானது முதலே ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வந்தது. இந்நிலையில், படத்தின் முதல் மற்றும் இரண்டாம் கட்ட படப்பிடிப்புகள் மும்பை, கொடைக்கானலில் விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்தது. இதன் அடுத்த கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் துவங்க உள்ளது. இதற்காக, நடிகர் சூர்யா அங்கு சென்றுள்ளார்.







