IPL2024-ல் முதல்முறையாக விக்கெட்டை பறிகொடுத்த தோனி.. பஞ்சாப் அணிக்கு 163 ரன்கள் இலக்காக நிர்ணயித்த சிஎஸ்கே!

பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 162 ரன்கள் எடுத்தது. எனவே பஞ்சாப் அணிக்கு 163 ரன்கள் இலக்காக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 17வது ஐபிஎல்…

பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 162 ரன்கள் எடுத்தது. எனவே பஞ்சாப் அணிக்கு 163 ரன்கள் இலக்காக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

17வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. 10 அணிகள் கலந்து கொண்டுள்ள இந்த தொடரில் இதுவரை நடந்துள்ள லீக் ஆட்டங்களின் முடிவில் ராஜஸ்தான் ராயல்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் புள்ளிப்பட்டியலில் முதல் 4 இடங்களில் உள்ளன.

இந்நிலையில் இந்த தொடரில் இன்று நடைபெறும் 49வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் – பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன. சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் நடைபெறும் இந்த போட்டியில், டாஸ் வென்ற பஞ்சாப் அணி, பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து சென்னை அணி பேட்டிங்கை தொடங்கியது.

ரஹானே மற்றும் கெய்க்வாட் முதலில் களமிறங்கினர். ரஹானே 24 பந்தில் 29 ரன்கள் சேர்த்த நிலையில், ஹர்ப்ரீத் பிரார் பந்தில் தனது விக்கெட்டினை இழந்து வெளியேறினார். பின்னர் மூன்றாவது வீரராக களமிறங்கிய சிவம் துபே கோல்டன் டக் ஆகி வெளியேறினார். இவரது விக்கெட்டினை ஹர்ப்ரீத் பிரார் கைப்பற்றினார். தொடர்ந்து, 10வது ஓவரில் ஜடேஜா 4 பந்தில் 2 ரன்கள் சேர்த்த நிலையில் ராகுல் சஹார் ஜடேஜா விக்கெட்டினை கைப்பற்றினார்.

15 ஓவர்கள் முடிவில் சென்னை அணி 3 விக்கெட்டுகளை இழந்து 103 ரன்கள் சேர்த்தது. சென்னை அணியின் இம்பேக்ட் ப்ளேயராக களமிறங்கிய ரிஸ்வி தனது விக்கெட்டினை 16வது ஓவரை வீசிய ரபாடா பந்தில் இழந்து வெளியேறினார். இவர் 23 பந்தில் 21 ரன்கள் சேர்த்து வெளியேறினார். தொடர்ந்து 17.5 ஓவரில் சென்னை அணியின் கேப்டன் கெய்க்வாட் 62 ரன்கள் சேர்த்த நிலையில் வெளியேறினார். தொடர்ந்து, மொயின் அலி 9 பந்துகளில் 15 ரன்கள் எடுத்த நிலையில், தனது விக்கெட்டினை இழந்தார்.

இறுதியாக களமிறங்கிய தோனி 11 பந்துகளில் 14 ரன்கள் எடுத்த நிலையில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார். மிட்செல் ஒரு பந்திற்கு ஒரு ரன் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு சென்னை அணி 162 ரன்கள் எடுத்தது. எனவே பஞ்சாப் அணிக்கு 163 ரன்கள் இலக்காக நிர்ணயம் செய்யப்பட்டது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.