இஸ்ரேல் அதிபர் ஐசக் ஹெர்சாக், புதிய அரசை அமைக்கும் பொறுப்பை யாஷர் கட்சித் தலைவர் காடி ஐசன்காட்டிடம் நவம்பர் 8 -ஞாயிற்றுக்கிழமை அதிகாரப்பூர்வமாக ஒப்படைத்தார். அவருக்கு ஆதரவாக 67 நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். அதேவேளையில், பெஞ்சமின் நெதன்யாகு தலைமையிலான லிகுட் கூட்டணிக்கு 46 உறுப்பினர்கள் மட்டுமே ஆதரவு தெரிவித்துள்ளனர். இதையடுத்து, புதிய அரசை அமைக்க ஐசன்காட்டுக்கு 28 நாட்கள் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. தேவைப்பட்டால் அதிபர் மேலும் 14 நாட்கள் கால அவகாசத்தை நீட்டிக்க முடியும். இதன் மூலம் பெரும்பான்மையை நிரூபித்து ஆட்சி அமைக்க அவருக்கு மொத்தம் 6 வாரங்கள் வரை வாய்ப்பு உள்ளது.
நெதன்யாகுவுக்கு ஐசன்காட் விடுத்த சவால்!
இஸ்ரேலின் மிக நீண்டகால பிரதமராகப் பதவி வகித்த நெதன்யாகு, அக்டோபர் 27-ம் தேதி நடைபெற்ற தேர்தலில் அவரது கூட்டணி நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை இழந்ததைத் தொடர்ந்து ஆட்சியைத் தக்கவைக்கப் போராடி வருகிறார். இருப்பினும், நாடாளுமன்றத்தில் அவரது கூட்டணியே மிகப்பெரிய அணியாகத் தொடர்கிறது. இதற்கிடையே, ஆட்சியைத் தக்கவைத்துக்கொள்ள நெதன்யாகு தேசிய ஒற்றுமை அரசை அமைக்க வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளார். நெதன்யாகுவையும் அவரது தீவிர வலதுசாரி கூட்டணிக் கட்சிகளில் ஒன்றையும் தனது கூட்டணி அரசில் சேர்த்துக்கொள்ளத் தயாராக இருப்பதாக ஐசன்காட் தெரிவித்துள்ளார். ஆனால், அந்த அரசுக்குத் தானே தலைமை வகிக்க வேண்டும் என்றும் அவர் நிபந்தனை விதித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், “லிகுட் மற்றும் மதவாத சியோனிசக் கட்சியைச் சேர்ந்தவர்கள் உண்மையிலேயே ஒற்றுமைக்கான நேரம் இது என்று நம்பினால், நான் முன்வைத்த கொள்கைகளின் அடிப்படையில், எனது தலைமையிலான அரசை அவர்கள் ஆதரிக்காமல் இருப்பதற்கு எந்தக் காரணமும் இல்லை” என்றார்.
கூட்டணி அமைக்கத் தீவிர முயற்சி!
அதிபரின் அதிகாரப்பூர்வ அறிவிப்பைத் தொடர்ந்து, ஐசன்காட் புதிய அரசை அமைப்பதற்கான கூட்டணிப் பேச்சுவார்த்தைகளைத் தொடங்க உள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், “எனக்கு வழங்கப்பட்டுள்ள இந்தப் பொறுப்பின் அடிப்படையில், தேசிய அவசரகால அரசை அமைப்பதில் உறுதியாக இருக்கிறேன். இதற்கு ஆக்கப்பூர்வமான மற்றும் வழக்கத்திற்கு மாறான அரசியல் நடவடிக்கைகள் தேவைப்படும். நேரத்தை வீணடிக்கவோ, முடிவில்லாத தேர்தல் சுற்றுகளை மீண்டும் எதிர்கொள்ளவோ இஸ்ரேலுக்கு வாய்ப்பில்லை” என்றார். 2023 அக்டோபர் 7-ம் தேதி ஹமாஸ் நடத்திய தாக்குதல்கள் மற்றும் காசா உள்ளிட்ட பிராந்தியங்களில் மூன்று ஆண்டுகளாக நீடிக்கும் மோதல்களுக்குப் பிறகு, இஸ்ரேல் கடுமையான அரசியல் பிளவைச் சந்தித்து வருகிறது. இந்நிலையில் நடைபெற்ற தேர்தலில் எந்த அணிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை.
முன்னாள் ராணுவத் தலைவரான ஐசன்காட், அரபுக் கட்சிகளுடன் கூட்டணி அமைக்கப் போவதில்லை என்று ஏற்கெனவே திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். அந்தக் கட்சிகளின் ஆதரவு கிடைத்தால் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையைப் பெற அவருக்கு உதவியாக இருக்கும். இருப்பினும், நெதன்யாகு மற்றும் அவரது தீவிர வலதுசாரி கூட்டணியின் கொள்கைகளை எதிர்க்கும் அரபுத் தலைவர்கள், புதிய அரசை அமைப்பதற்கான முதல் வாய்ப்பை ஐசன்காட்டுக்கு வழங்க வேண்டும் என்று பரிந்துரைத்தனர். இதனால் அவருக்கு அதிக எண்ணிக்கையிலான உறுப்பினர்களின் ஆதரவு கிடைத்துள்ளது.
இதற்கிடையே, சமீபத்திய தேர்தலில் 7 இடங்களைக் கைப்பற்றிய யிஸ்ரேல் பெய்டெனு கட்சியின் தலைவர் அவிக்டோர் லிபர்மேனை ஐசன்காட் திங்கள்கிழமை சந்திக்க உள்ளதாக இஸ்ரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அரபுக் கட்சிகளுடன் இணைந்து செயல்படுவதற்கு லிபர்மேன் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், அவருடன் கூட்டணி அமைப்பது குறித்து இந்தச் சந்திப்பில் ஆலோசிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
அரபுக் கட்சிகள் குறித்து நெதன்யாகு விமர்சனம்!
ஐசன்காட் அரபுக் கட்சிகளுடன் கூட்டணி அமைப்பதைத் தடுக்கும் முயற்சியில் நெதன்யாகு ஈடுபட்டு வருகிறார். அரபுக் கட்சிகள் தேர்தலைத் திருடிவிட்டதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார். அதிபரின் அறிவிப்புக்கு சற்று முன்பு வெளியிட்ட காணொளிச் செய்தியில், தேசிய ஒற்றுமை அரசை அமைக்க வேண்டும் என்று நெதன்யாகு மீண்டும் வலியுறுத்தினார். மேலும், “பயங்கரவாத ஆதரவாளர்களுடன் அவசரமாக ஓர் அரசை அமைப்பதற்கு” எதிராகவும் எச்சரித்தார். அரபுக் கட்சிகளைக் குறிப்பிடுவதற்காகவே அவர் இந்தச் சொல்லைப் பயன்படுத்தி வருகிறார்.
ஐசன்காட்டுக்கு உள்ள வாய்ப்புகள் என்ன?
ஐசன்காட் அரசு அமைப்பதற்கு பல்வேறு வழிகள் உள்ளன. அரபுக் கட்சிகளின் ஆதரவுடன் சிறுபான்மை அரசை அமைத்து, முக்கியமான வாக்கெடுப்புகளில் அவர்களின் ஆதரவைப் பெறலாம். அல்லது, அவரும் அவரது கூட்டணிக் கட்சிகளும் இதுவரை தவிர்த்து வந்த தீவிர மதவாதக் கட்சிகளுடன் உடன்பாடு ஏற்படுத்தலாம். மற்றொரு வாய்ப்பாக, நெதன்யாகுவுடன் இணைந்து தேசிய ஒற்றுமை அரசை அமைக்கவும் முயற்சி செய்யலாம்.
ஐசன்காட் அரசு அமைக்கத் தவறினால், மற்றொரு நபருக்கு அந்த வாய்ப்பு வழங்கப்படும். அந்த முயற்சியும் தோல்வியடைந்தால், நாடாளுமன்றமே வேறொரு நபரைப் பரிந்துரைக்கலாம். இந்த முழு நடைமுறையையும் முடிப்பதற்கு சுமார் 100 நாட்கள் வரை கால அவகாசம் உள்ளது. யாராலும் அரசு அமைக்க முடியாத சூழல் ஏற்பட்டால், இஸ்ரேலில் மீண்டும் தேர்தல் நடத்த வேண்டியிருக்கும். ஏற்கெனவே 2019 முதல் 2022 வரையிலான காலகட்டத்தில் அரசியல் முட்டுக்கட்டைகள் காரணமாக அந்நாடு ஐந்து முறை தேர்தலைச் சந்தித்துள்ளது.
புதிய நாடாளுமன்றக் கூட்டத்தில் முக்கிய முடிவு?
இதற்கிடையே, இஸ்ரேல் நாடாளுமன்றமான நெசெட்டின் முதல் கூட்டத்தொடர் நவம்பர் 10-ம் தேதி செவ்வாய்க்கிழமை நடைபெற உள்ளது. அன்றைய கூட்டத்தில் புதிய சபாநாயகரைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று நான்கு எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன. இதன் மூலம் லிகுட் கட்சியைச் சேர்ந்த தற்போதைய சபாநாயகர் அமீர் ஓஹானா பதவியிலிருந்து நீக்கப்பட வாய்ப்புள்ளது. ஆனால், புதிய நாடாளுமன்றத்தின் முதல் கூட்டத்தில் இதுதொடர்பான வாக்கெடுப்புக்கு அனுமதி அளிக்க மாட்டேன் என்று ஓஹானா தெரிவித்துள்ளார். அதேவேளையில், பெரும்பான்மையான உறுப்பினர்கள் முறையாகக் கோரிக்கை விடுத்தால், அடுத்த வாரத்துக்குள் புதிய சபாநாயகரைத் தேர்ந்தெடுப்பது தொடர்பாக விவாதம் நடத்த ஏற்பாடு செய்வதாகவும் அவர் கூறியுள்ளார்.




