உலகின் செல்வாக்கு மிக்க அமைப்புகளில் ஒன்றான ஜி20 அமைப்பின் தலைமை பொறுப்பு இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
வளரும் மற்றும் வளர்ச்சி அடைந்த நாடுகளை உள்ளடக்கிய அமைப்புதான் ஜி20. இந்தியா, சீனா, அமெரிக்கா, ரஷ்யா, இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, ஆஸ்திரேலியா, இத்தாலி, ஜப்பான், சவுதி அரேபியா, மெக்சிகோ, தென்கொரியா, தென் ஆப்ரிக்கா, பிரசில், கனடா, இந்தோனேஷியா, துருக்கி, அர்ஜென்டினா, மற்றும் ஐரோப்பிய யூனியன் ஆகியவை ஜி20 அமைப்பில் இடம்பெற்றுள்ளன.
உலகின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 80 சதவீதம் ஜி20 அமைப்பில் உள்ள நாடுகளின் பங்களிப்பாக உள்ளன. சர்வதேச வர்த்தகத்தில் ஜி20 அமைப்பில் உள்ள நாடுகள் 75 சதவீத பங்களிப்பை அளிக்கின்றன. உலக மக்கள் தொகையில் 60 சதவீதம் பேர் ஜி20 அமைப்பில் உள்ள நாடுகளில்தான் வசிக்கின்றனர்.
சர்வதேச பிரச்சனைகள் தொடர்பாக முடிவெடுப்பதில் முக்கிய பங்கு வகிக்கும் ஜி20 அமைப்பின் தற்போதைய தலைவராக இந்தோனேஷியா உள்ள நிலையில், அடுத்த தலைமை பொறுப்பு இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதற்கான அடையாள சின்னத்தை பாலியில் நடைபெற்ற ஜி20 மாநாட்டின் நிறைவு நாளில், இந்தோனேஷிய அதிபர் ஜோகோ ஜிடோடோ இந்திய பிரதமர் மோடியிடம் வழங்கினார். வரும் 1ந்தேதி முதல் அதிகாரப்பூர்வமாக ஜி20 அமைப்பின் தலைமைப் பொறுப்பை இந்திய ஏற்க உள்ளது.
ஜி20 அமைப்பின் தலைமை பொறுப்பை ஏற்பது குறித்து கருத்து தெரிவித்துள்ள பிரதமர் மோடி, ”ஒரே உலகம், ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம்” என்கிற தொலைநோக்கு சிந்தனையை செயல்படுத்தும் வகையில் இந்தியாவின் தலைமை அமையும் என்று கூறியுள்ளார். அனைவரையும் ஒருங்கிணைத்துச் செல்லும்படியான, செயலாற்றல் மிகுந்த, உறுதியான, லட்சிய உறுதிமிக்க தலைமையாக இந்தியாவின் தலைமை இருக்கும் என்றும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.







