ஜி20 உச்சி மாநாடு வெற்றி பெற குடியரசு தலைவர் திரௌபதி முர்மு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
ஜி20 நாடுகளின் 18-வது மாநாடு டெல்லியில் இன்றும், நாளையும் நடைபெறுகிறது. இந்த மாநாட்டிற்காக பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மாநாடு நடைபெறும் பகுதிகளில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ஆஸ்திரேலிய பிரதமர் ஆல்பனேசி, பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக், ஜப்பான் பிரதமர் கிஷிடா உள்ளிட்ட 20 நாடுகளின் தலைவர்கள் டெல்லி வந்துள்ளனர்.
மேலும் ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின், பிரான்ஸ் அதிபர் மேக்ரான், சீன அதிபர் ஜின்பிங் உள்ளிட்டோர் இந்த மாநாட்டில் கலந்துகொள்ளவில்லை. அவர்களுக்கு பதிலாக அந்நாடுகளின் பிரதிநிதிகள் டெல்லி வந்துள்ளனர்.
இந்நிலையில் ஜி 20 மாநாடு வெற்றி பெற குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில்,
டெல்லியில் நடைபெறும் 18-வது ஜி20 உச்சி மாநாட்டில் பங்கேற்கும் ஜி 20 நாடுகளின் தலைவர்கள், விருந்தினர்கள், சர்வதேச அமைப்புகளின் பிரதிநிதிகள் குழுவினரை வரவேற்கிறேன்.
இந்தியாவின் ஜி 20 மாநாடு ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம், என்பதை மையமாகக் கொண்ட வளர்ச்சிக்கான உலகளாவிய சாலையின் வரைபடமாகும். இந்த தொலைநோக்கை நனவாக்கும் முயற்சிகளில் பங்கேற்றுள்ள தலைவர்களின் முயற்சி வெற்றி பெற வாழ்த்துகிறேன் என குடியரசு தலைவர் கூறியுள்ளார்.