பயங்கரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் போராட்டத்திற்கு முழு ஆதரவு – ரஷ்ய அதிபர் புதின் அறிவிப்பு!

ரஷ்ய அதிபர் புதின்பயங்கரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் போராட்டத்திற்கு முழு ஆதரவு தெரிவித்துள்ளார்.

ஜம்மு – காஷ்மீர் பஹல்காம் பகுதியில் கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி பயங்கரவாத தாக்குதல் நடந்ததில் 26 பேர் கொல்லப்பட்டனர். இதையடுத்து இந்த பயங்கரவாத செயலுக்கு அமெரிக்கா, இஸ்ரேல் உள்ளிட்ட பல்வேறு நாடுகள் கண்டனம் தெரிவித்தன.

தொடர்ந்து இந்தியா, பாகிஸ்தான் மீதும் பாகிஸ்தான், இந்தியா மீதும் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்தது. இது தற்போது இரு நாடுகளிடையே போர் பதற்றத்தை அதிகரிக்க காரணமாக அமைந்துள்ளது. இதனிடையே இரு நாடுகளுக்கும் இடையே மத்தியஸ்தம் வகிக்க முன் வருவதாக சீனா விருப்பம் தெரிவித்தது.

இந்த நிலையில் பயங்கரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் போராட்டத்திற்கு முழு ஆதரவைத் தருவதாக ரஷ்ய அதிபர் புதின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக வெளியுறவுத்துறை அமைச்சக செய்தி தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “ ரஷ்ய அதிபர் புதின் பிரதமர் மோடியை தொலைபேசி வாயிலாக தொடர்புகொண்டு பஹல்காம் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து, அப்பாவி மக்களின் உயிரிழப்புக்கு இரங்கலை கூறினார்.

பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் இந்தியாவுக்கு முழு ஆதரவையும் தெரிவித்தார். கொடூரமான தாக்குதலுக்குக் காரணமானவர்களும் அவர்களின் ஆதரவாளர்களும் நீதியின் முன் நிறுத்தப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்” என்று கூறியுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.