இயக்குநர் பாரதிராஜா உடலுக்கு முழு அரசு மரியாதை – முதலமைச்சர் விஜய் அறிவிப்பு…!

மறைந்த இயக்குநர் பாரதிராஜா உடலுக்கு முழு அரசு மரியாதை வழங்கப்படும் என்று முதலமைச்சர் விஜய் தெரிவித்துள்ளார்.

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான பாரதிராஜா உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலமானார். மருத்துவ சிகிச்சை பெறு வந்த பாரதிராஜா சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் நள்ளிரவு 2 மணியளவில் உயிரிழந்தார்.

பாரதிராஜா மறைவிற்கு அரசியல் மற்றும் சினிமாதுறையினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். தமிழ் நாடு முதலமைச்சர் விஜய் வெளியிட்டுள்ள இரங்கலில் கூறப்பட்டுள்ளதாவது :

தமிழ்த் திரையுலகின் இயக்குநர் இமயம் திரு. பாரதிராஜா அவர்கள் காலமானார் என்ற செய்தி அறிந்து மிகுந்த மனவேதனையும் துயரமும் அடைந்தேன். கிராமியப் பின்னணியில் வாழ்வியல் உயிரோட்டத்துடன் பல வெற்றிப் படங்களை உருவாக்கி, தமிழ்த் திரைப்பட உலகில் தனக்கென தனி முத்திரை பதித்தவர் இயக்குநர் திரு. பாரதிராஜா அவர்கள்.

தனது படைப்புகளுக்காக நாட்டின் உயரிய விருதான பத்மஸ்ரீ உள்ளிட்ட பல்வேறு தேசிய, மாநில விருதுகளைப் பெற்றவர். பல தலைமுறைக் கலைஞர்களை உருவாக்கிய அவரது பங்களிப்பு தமிழ்த் திரைப்பட வரலாற்றில் என்றென்றும் நிலைத்திருக்கும்.

இயக்குநர் இமயம் திரு. பாரதிராஜா அவர்களின் மறைவு, தமிழ்த் திரையுலகிற்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், திரைப்படத் துறையினருக்கும், ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற பிரார்த்திக்கிறேன்.

திரைத்துறையில் திரு. பாரதிராஜா அவர்களின் பங்களிப்பைப் போற்றி, அஞ்சலி செலுத்தும் வகையில் அவரது இறுதிப் பயணத்திற்கு அரசு மரியாதை வழங்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.