அதிமுக தலைமை அலுவலகத்தில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் பணத்தையும் எடுத்து சென்றதாக முன்னாள் அமைச்சர் தங்கமணி குற்றம்சாட்டியுள்ளார்.
திமுக அரசின் விலை உயர்வு மற்றும் மின் கட்டண உயர்வை உடனடியாக திரும்ப பெற வலியுறுத்தி திருச்சி அண்ணா சிலை முன்பு அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. முன்னாள் அமைச்சர் தங்கமணி தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், ஏராளமான அதிமுகவினர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தின்போது பேசிய தங்கமணி, மின் வெட்டு மிக மோசமாக உள்ளது. மக்கள் எதற்காக மின் நிறுத்தம் என்று தெரியாமல் வருத்தத்தில் உள்ளதாக கூறினார்.
மத்திய அரசு 28 முறை கடிதம் போட்டு விட்டார்கள், அதனால் மின் கட்டண உயர்வை ஏற்று கொள்ள வேண்டும் என்கின்றனர். ஜெயலலிதாவால் அடையாளம் காட்டப்பட்ட செந்தில் பாலாஜி இன்று திமுகவில் சேர்ந்து ஜெயலலிதாவையே குற்றம் சாட்டி வருகிறார். சொத்து வரியை உயரத்தியது மட்டுமல்லாமல் தற்போது மின் கட்டணத்தையும் உயர்த்தி உள்ளனர். ஏற்கனவே கொரோனாவால் மக்கள் பொருளாதார ரீதியாக மிகவும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த விலை உயர்வு மக்களை மிகவும் பாதிப்படையை செய்யும்.
1 லட்சம் விவசாயிகளுக்கு மின் இணைப்பு கொடுத்துள்ளோம் என திமுக அரசு கூறிவருகிறது. ஆனால் நிறைய பேருக்கு மின் இணைப்பு வழங்கவில்லை. கள்ளக்குறிச்சி விவகாரம் மூலம் சட்டம் ஒழுங்கு எவ்வாறு செயல்படுகிறது என்பது தெரிகிறது என குற்றம்சாட்டினார். பொதுக்குழு நடந்த போது அவருக்கு என்று இருக்கை இருக்க அதை விட்டு விட்டு ஒ.பி.எஸ் தலைமை கழகம் சென்றார். தலைமை கழகத்திற்கு போலீஸ் பாதுகாப்பு வேண்டுமென்று கேட்டால், அதை விட்டுவிட்டு ஓபிஎஸ்க்கு காவல் இருந்துள்ளனர் என்றார்.
இதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் தங்கமணி, இலவச வேட்டி சேலை திட்டம் முன்னாள் முதல்வர் அம்மாவால் கொண்டு வந்ததன் நோக்கமே கைத்தறி நெசவாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும் என்பதற்கு ஆனால் தற்போது அதனை நிறுத்த உள்ளதாக தெரிய வருகிறது என்றார். அதற்கு பதிலாக பிரிண்டிங் சேலை தரவுள்ளதாக கூறப்படுகிறது. இலவச வேட்டி சேலை திட்டத்தை நிறுத்தக்கூடாது என்று கேட்டுக்கொள்கிறோம்.
அதிமுக தலைமை அலுவலகத்தில் கோப்புகள் பத்திரங்கள் மற்றும் பணம் காணாமல் போனதாக சிவி சண்முகம் கொடுத்த புகார் குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், பணம் காணாமல் போய் இருப்பதால்தான் காணாமல் போய் உள்ளது என்று புகார் தெரிவித்துள்ளோம், என்னென்ன பொருட்கள் காணாமல் போய் உள்ளதோ அதைப் பற்றி தானே புகார் கொடுக்க முடியும் என்றார்.
எடப்பாடி பழனிச்சாமி மீது பதிவு செய்யப்பட்ட வழக்கு மற்றும் இன்று விசாரணை குறித்த கேள்விக்கு எதுவாக இருந்தாலும் நீதிமன்றத்தின் வாயிலாக எதிர்கொள்வோம் என்றார். 40 நாடாளுமன்ற தொகுதிகளிலும் அதிமுக வெற்றி பெறும் மக்கள் அந்த அளவுக்கு இந்த அரசு மீது கோபத்தில் உள்ளார்கள். மத்திய அரசு ஓபிஎஸ்க்கு ஆதரவாக உள்ளதாக எழுப்பிய கேள்விக்கு நீங்கள் தான் சொல்கிறீர்கள் கட்சி வேறு கொள்கை வேறு அதிமுக தலைமைக்கு தலைவர் உள்ளார் என தங்கமணி விளக்கமளித்தார்.
– இரா.நம்பிராஜன்








