“2025-26 கல்வியாண்டு முதல், ஆண்டுக்கு 2 முறை பொதுத் தேர்வு” – மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான்!

வரும் 2025-26 கல்வியாண்டு முதல்,  ஓராண்டுக்கு 2 முறை பொதுத் தேர்வு நடத்தப்படும் என மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் அறிவித்துள்ளார். பள்ளிக் கல்விக்கான தேசிய பாடத்திட்டத்தை (NCF) மத்திய அரசு கடந்த…

வரும் 2025-26 கல்வியாண்டு முதல்,  ஓராண்டுக்கு 2 முறை பொதுத் தேர்வு நடத்தப்படும் என மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் அறிவித்துள்ளார்.

பள்ளிக் கல்விக்கான தேசிய பாடத்திட்டத்தை (NCF) மத்திய அரசு கடந்த ஆண்டு வெளியிட்டது.  இதனைத் தொடர்ந்து பொதுத் தேர்வுகள் நடத்தும் முறையில் பெரிய அளவில் மாற்றம் கொண்டு வரப்பட்டது.  அதாவது, ஓராண்டுக்கு 2 முறை பொதுத் தேர்வு நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டது.

பொதுத் தேர்வுக்கு தயாராகும் வகையில் மாணவர்களுக்கு போதுமான கால அவகாசம் வழங்குவதற்காக இந்த முறை அமல்படுத்தப்பட உள்ளதாக மத்திய கல்வித்துறை அமைச்சகம் தெரிவித்தது.  மேலும், 2 பொதுத் தேர்வுகள் நடத்தப்பட்டாலும்,  மாணவர்கள் 2 தேர்வுகளில் எந்த தேர்வில் நல்ல மதிப்பெண் எடுக்கிறார்களோ அதையே இறுதி மதிப்பெண்ணாக எடுத்துக் கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டது.

சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் கீழ் பயிலும் மாணவர்களுக்கும், மாநில பாடத்திட்டங்களின் கீழ் பயிலும் மாணவர்களுக்கும் இந்த முறை பொருந்தும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.  ஆனால், இந்த முறை எப்போதிலிருந்து நடைமுறைக்கு வரும் என்று அறிவிக்கப்படாமல் இருந்தது.  இந்த நிலையில்,  வரும் 2025-26 கல்வியாண்டு முதல் இந்த முறை அமல்படுத்தப்படும் என மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் அறிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.