சென்னை திருவான்மியூரில் உணவில் மண் விழுந்ததால் ஏற்பட்ட பிரச்சனையில், தன்னை தாக்கிய இரண்டு நண்பர்களையும் கத்தியால் குத்தி கொன்ற கோபகார நண்பன் காவல்நிலையத்தில் சரணடைந்தார்.
சென்னை திருவான்மியூர் மீனவ குப்பம் பகுதியை சேர்ந்தவர்கள் அருண் (25), சதீஷ்(25), தினேஷ் (25). நண்பர்களான மூன்றுபேரும் வேலையின்றி சுற்றி திரிந்துள்ளனர். இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்புகளுக்கு அப்பகுதியில் உயிரிழந்த சுமதி என்பவரின் பதினான்காம் நாள் துக்க நிகழ்ச்சியில் நேற்றிரவு அவர்கள் கலந்து கொண்டுள்ளனர். அப்போது, நண்பர்கள் மூன்றுபேரும் குடியிருப்பு பகுதியிலேயே மது அருந்திய பிறகு ஒன்றாக அமர்ந்து உணவு உண்டுள்ளனர்.
மூன்று பேரும் பேசியபடி உணவருந்திய போது, அருண் என்பவர் விளையாட்டுக்காக செருப்பை தினேஷின் மீது எரிந்துள்ளார். அப்போது, செருப்பில் இருந்த மண் தினேஷின் சாப்பாட்டில் விழுந்ததால், தினேசுக்கும் அருணுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டடு பின்னர் கை கலப்பாக மாறியது.இதில் மற்றொரு நண்பரான சதீஷ்குமார் அருணுடன் சேர்ந்து கொண்டு தினேஷை தாக்கியதாக கூறப்படுகிறது.
எங்களையே தாக்குகிறாயா நாங்கள் இங்கேயே இருக்கிறோம் உன்னால் முடிந்ததை பார்த்து கொள் என அருணும், சதீஷ்குமாரும் மிரட்டியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த தினேஷ், வீட்டில் இருந்த மீன் வெட்டும் கத்தியை எடுத்து வந்து அருணின் வயிற்றில் குத்தியுள்ளார். இதை பார்த்ததும் அங்கிருந்து தப்பி ஓடிய சதீஷ்குமாரையும் தினேஷ் விரட்டி சென்று கத்தியால் குத்தியுள்ளார். இதனால் ரத்த வெள்ளத்தில் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். நண்பர்களை கொன்று விட்டு செய்வதறியாது நின்ற தினேஷ், நேரடியாக திருவான்மியூர் காவல் நிலையத்திற்கு சென்று சரணடைந்தார்.
பின்னர் சம்பவ இடத்திற்கு சென்ற திருவான்மியூர் போலீசார் உயிரிழந்த இருவரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து தினேஷிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.







