உஜ்வாலா திட்டத்தின் கீழ் புதிதாக 75 லட்சம் ஏழைகளுக்கு 3 ஆண்டுகளில் இலவச காஸ் இணைப்பு வழங்கவும், இதற்காக ரூ.1,650 கோடி ஒதுக்கவும் மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டதாக மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் தெரிவித்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று காலை மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. அதில், பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா திட்டத்தின் கீழ், கூடுதலாக 75 லட்சம் (அதாவது) ஆண்டொன்றுக்கு 25 லட்சம் இலவச சிலிண்டர்கள் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்நிலையில், உஜ்வாலா திட்டத்தில் இலவச சிலிண்டர் இணைப்பு வழங்க, ரூ.1,650 கோடி நிதி ஒதுக்க ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா, வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ள (பிபிஎல்) குடும்பங்களின் பெண்களுக்கு இலவச சிலிண்டர்கள் இணைப்புகளை வழங்குவதற்காக இந்த திட்டம் மே 2016 இல் பிரதமரால் தொடங்கப்பட்டது.
இதுகுறித்து மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் கூறும்போது, ”இன்று இரண்டு முடிவுகள் எடுக்கப்பட்டன. அடுத்த 3 ஆண்டுகளில் 2026 வரை 75 லட்சம் எல்பிஜி இணைப்புகள் இலவசமாக வழங்கப்படும். இது உஜ்வாலா யோஜனாவின் நீட்டிப்பு. இரண்டாவது முடிவு ரூ.7,210 கோடி மதிப்பிலான இ-கோர்ட்ஸ் மிஷன் மோட் ப்ராஜெக்ட் 3ஆம் கட்டத்திற்கு இன்று ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
ஆன்லைன் மற்றும் காகிதம் இல்லாத நீதிமன்றங்களை நிறுவுவதே இதன் இலக்கு. இதன் மூலம் நீதித்துறை இன்னும் வெளிப்படைத்தன்மையுடன் இருக்கும். நீதிமன்றங்கள், இ-ஃபைலிங் மற்றும் இ-பேமென்ட் அமைப்புகள் உலகளாவியதாக மாற்றப்படும். தரவுகளை சேமிக்க கிளவுட் ஸ்டோரேஜ் உருவாக்கப்படும். அனைத்து நீதிமன்ற வளாகங்களிலும், 4,400 இ-சேவை மையங்கள் நிறுவப்படும்.” இவ்வாறு தெரிவித்துள்ளார்.