”கட்டணமில்லா பேருந்து பயணம் இனி விடியல் பயணம் என அழைக்கப்படும்” – சுதந்திர தின உரையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு

”பெண்களுக்கான கட்டணமில்லா பேருந்து பயணம் இனி விடியல் பயணம் என அழைக்கப்படும்” என சுதந்திர தின உரையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சுதந்திரத் தின விழாவையொட்டி தலைமைச் செயலகக் கோட்டை கொத்தளத்தில் தமிழ்நாடு முதலமைச்சர்…

”பெண்களுக்கான கட்டணமில்லா பேருந்து பயணம் இனி விடியல் பயணம் என அழைக்கப்படும்” என சுதந்திர தின உரையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சுதந்திரத் தின விழாவையொட்டி தலைமைச் செயலகக் கோட்டை கொத்தளத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். முன்னதாக காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையை  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏற்றுக் கொண்டார்.

இதனைத் தொடர்ந்து உரையாற்றிய அவர் தெரிவித்ததாவது..

முதலமைச்சராக பதவியேற்ற பின் மூன்றாவது முறையாக சுதந்திர தினத்தன்று கொடி ஏற்றுகிறேன். அனைத்து மக்களுக்கும் சுதந்திர தின வாழ்த்துக்கள். தமிழ்நாடுதான் விடுதலைப் போராட்டத்துக்கான விதையை முதலில் விதைத்தது. விடுதலை தாகத்தில் – விடுதலை வேகத்தில், நாட்டுப்பற்றில் நம் தமிழ் இனம் இந்தியாவில் உள்ள எந்த இனத்திற்கும் எந்தவிதத்திலும் குறைந்தது அல்ல.

விடுதலைப் போராட்ட தியாகிகளுக்கிம், அவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கும் தற்போது வழங்கப்பட்டு வரும் மாதாந்திர ஓய்வூதியம் பத்தாயிரம் ரூபாயிலிருந்து, 11 ஆயிரம் ரூபாயாக இனி உயர்த்தி வழங்கப்படும் என்ற புதிய அறிவிப்பை இன்று வெளியிடுவதில்மகிழ்ச்சி அடைகிறேன்.

காலம் காலமாக குடும்ப பாரத்தை சுமக்கின்ற பெண்கள் – தங்கள் உழைப்பிற்கு எந்த மதிப்பும் இன்றி, இதுதான் தங்களுக்கு விதிக்கப்பட்டது என்று எண்ணியிருந்த நிலையை மாற்றிடும் வகையிலும், ஆணுக்கு இணையாகப் பெண்களுக்கும் உரிமை உண்டு என்பதை உணர்ந்து கொள்ளும் வகையிலும், இந்தியாவில் வேறெந்த மாநிலத்திலும் இல்லாத மகத்தானத் திட்டத்தை அறிமுகப்படுத்த இருக்கிறோம்.

ஏறத்தாழ 1 கோடி மகளிர் மாதம்தோறும்பயனடையும் வகையில்கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் அடுத்த மாதம் 15-ஆம் நாள் பேரறிஞர் அண்ணா பிறந்தநாளன்று தொடங்கப்பட இருக்கிறது.

பல்வேறு தரப்பு மகளிரின் பொருளாதாரச் சுமையை குறைக்கும் வகையில், பேருந்துகளில் அவர்கள் கட்டணம் செலுத்தாமல் பயணிக்கக் கொண்டுவரப்பட்ட திட்டத்தின்கீழ் தினசரி 50 இலட்சம் மகளிர் பயணிக்கின்றனர்.

இதுவரை இந்தத் திட்டத்தில் சுமார் 314 கோடி முறை பெண்கள் அரசுப் பேருந்துகளில் பாதுகாப்பான பயணம் மேற்கொண்டு பயனடைந்துள்ளனர். இந்தத் திட்டத்தால் ஒவ்வொருவரும் மாதம் ஒன்றுக்கு சராசரியாக 850 ரூபாய்க்கும் மேல் சேமிக்க முடிகிறது.

திமுக ஆட்சியானது கோடிக்கணக்கான பெண்களுக்கு பொருளாதார விடியலைக் கொடுத்துள்ளதன் அடையாளமான இந்தத் திட்டமானது, இனி’விடியல் பயணம்’ என்று பெயர் சூட்டப்படுகிறது. மகளிர் வாழ்க்கையில் இனி அவர்கள் பெறப் போகிற அனைத்து விடியலுக்குமான தொடக்கப் பயணமாக இது தொடரும்.”

இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.