சென்னையில் கவர்ச்சி உடை அணிந்து மணி டிரான்ஸ்பர் மூலம் நூதனமாக பண மோசடியில் ஈடுபட்ட இளம்பெண்ணை போலீசார் கைது செய்துள்ளனர்.
ஊரப்பாக்கம் அய்யன்சேரியை சேர்ந்தவர் ஷெரில்கன் சால்வெஸ். பிரபல தனியார் கல்லூரியில் படித்த பட்டதாரி என கூறிக் கொள்ளும் இவர் தாம்பரம் மாநகர காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள பணம் பரிவர்த்தனை செய்யும் கடைகளில் தனது தாயாருக்கு உடல்நிலை ரியில்லை உடனடியாக மருத்துவத் தேவைக்கு பணம் தேவை என கூறி (money transfer) பண பரிவர்த்தனையில் ஈடுபட்டுள்ளார்.
கடைக்காரருக்கு கமிஷன் தொகையை பொதுவாக பணமாக தான் கொடுப்பார்கள். ஆனால் அவர் சில காரணங்கள் கூறி, QR கோடு வழியாக மீண்டும் அனுப்புகிறேன் என தெரிவித்து போலியாக கடைக்காரர்களிடம் காட்டி விட்டு சற்று நேரத்தில் வெளியே தயாராக இருக்கும் கள்ளக்காதலன் மோட்டார் சைக்கிளில் பறந்து விடுவார்.
இந்நிலையில் நேற்று மேற்கு தாம்பரத்தில் உள்ள ஒரு கடையில் ரூ.20 ஆயிரம் பணம் டிரான்ஸ்பார் செய்துவிட்டு தப்பி ஓட முயன்றார். அப்போது சுதாரித்துக் கொண்ட கடை ஊழியர் அந்த பெண்ணை தடுத்து நிறுத்தினார். அப்போது அந்த பெண் கடை ஊழியரை தாக்கி தப்பி ஓட முயற்சிதுள்ளார். ஆனால் அருகில் இருந்த கடைக்காரர்கள் உதவியுடன், அந்த பெண்ணை மடக்கிப் பிடித்தனர். அதே சமயம் வெளியே இருந்த காதலன், அங்கிருந்து தப்பி ஓடினான்.
பின்னர் பிடிப்பட்ட அந்த பெண்ணை தாம்பரம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். அவரிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர். மாடம்பாக்கம் கோழிப்பண்ணை பகுதியைச் சேர்ந்த பாலா ஆனந்த் என்பவரிடம் கடந்த 7ம் தேதி 15 ஆயிரம் பணம் money transfer மூலம் அனுப்பிவிட்டு தப்பி சென்றதாக கூறப்படுகிறது.
அதேபோல், சந்தோஷ்புரத்தில் உள்ள ஹப்பீஸ் என்பவரிடம் கடந்த வாரம் ரூ.20 ஆயிரத்தை இந்த டிப்டாப் ஜோடிகள் மோசடி செய்ததாக தெரிகிறது. இதனிடையே ஏமாந்த கடைக்காரர்கள் 4 பேர் சேலையூர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
அனைத்து புகார்களையும் பெற்று கொண்ட போலீசார் ஷெரில்கன்சால்வெஸ் மீது வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.







