சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் கிரிக்கெட் தொடரில்
சச்சின் டெண்டுல்கர் தலைமையிலான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய அரசின் சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் மற்றும்
இந்திய அரசின் தகவல் மற்றும் தொழில்நுட்பம் மற்றும் இளைஞர் நலன் மற்றும்
விளையாட்டு அமைச்சகம் சார்பில் சாலை பாதுகாப்பு கிரிக்கெட் தொடர் நடத்தப்படும்.
கடந்த முறை முதல் சீசன் வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டுள்ள நிலையில்,
இம்முறை இரண்டாவது சீசன் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இந்தியா, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, இலங்கை, மேற்கிந்திய தீவுகள், தென்
ஆப்ரிக்கா, வங்கதேசம், இங்கிலாந்து உள்ளிட்ட அணிகள் இந்த சீசனில் பங்கேற்க
உள்ளன.
கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றவர்கள், தங்கள் நாட்டிற்காக பங்கேற்று
விளையாடும் இந்த கிரிக்கெட் தொடரில் பல்வேறு கிரிக்கெட் ஜாம்பவான்கள், அவரவர்
நாடுகளுக்கான பங்களிப்பை கொடுப்பார்கள்.
அதன் படி இந்தியா சார்பில் “இந்தியன் லெஜன்ட்ஸ்” எனும் பெயரில் அணி
உருவாக்கப்பட்டு, ஓய்வு பெற்ற ஜாம்பவான்கள் பலரை உள்ளடக்கி, போட்டியில்
களமிறக்கத் திட்டமிடப்பட்டுள்ளது
இந்தியன் லெஜன்ட்ஸ் அணி வீரர்கள் விபரம்
கேப்டன் – சச்சின் டெண்டுல்கர், யுவராஜ் சிங், இர்பான் பதான், யூசுப் பதான்,
ஹர்பஜன் சிங், முனாஃப் படேல், சுப்ரமணியம் பத்ரிநாத், ஸ்டூவர்ட் பின்னி, நமன்
ஓஜா (WK), மன்பிரீத் கோனி, பிரக்யான் ஓஜா, வினய் குமார், அபிமன்யு மிதுன்,
ராஜேஷ் பவார், ராகுல் சர்மா உள்ளிட்டோர் இந்தியன் லெஜன்ட் அணியில்
இடம்பிடித்து விளையாட உள்ளனர்.

இந்த கிரிக்கெட் தொடரின் மிக முக்கிய நோக்கமாக பார்க்கப்படுவது, சாலை
பாதுகாப்பு மற்றும் இந்தியாவில் இது குறித்த புரிதல் ஏற்படுத்த வேண்டும்
என்பதே. ஏற்கனவே லெஜன்ட் கிரிக்கெட் லீக் எனும் தொடர் இந்தியாவில்
நடத்தப்படும் நிலையில், நாட்டு வாரியாக அணிகள் பங்கேற்கும் சிறப்புமிக்க
போட்டியாக இது நடத்தப்படுவது, ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பையும்,
விழிப்புணர்வையும் ஏற்படுத்தி உள்ளது.







