விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் சதுரகிரி மலையில் உள்ள வனப்பகுதியில் 2வது நாளாக காட்டுத்தீ பரவி எரிந்து வருகிறது. மலைப்பகுதியில் தீ வைத்ததாக ஒருவரை கைது செய்து வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் அமைந்துள்ளது சதுரகிரி சுந்தர மகாலிங்கம் திருக்கோயில். அடிவாரப் பகுதியான தாணிப்பாறையில் இருந்து சுமார் 8 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ள இந்த சதுரகிரி மலைக்கு மேற்கு தொடர்ச்சி மலை வனப்பகுதி வழியை கடந்து தான் செல்ல வேண்டும். இங்குள்ள வனப்பகுதியில் அபூர்வ வகையான மூலிகை செடிகள் மற்றும் மரங்கள் உள்ளன.
வனப்பகுதியில் ஏற்படும் இடி, மின்னல் காரணமாகவும் பாறைகளின் உராய்வு காரணமாகவும் அடிக்கடி தீ விபத்து ஏற்படுவது வழக்கம். சில நேரங்களில் வனப்பகுதிக்குள் அத்துமீறி நுழையும் மர்ம நபர்களும் தீயை வைத்து விடுகின்றனர்.
ஏற்கனவே கடந்த 10 நாட்களுக்கு முன்பு மலைக் கோயிலுக்கு செல்லும் வனப்பகுதியில் சுமார் இரண்டு நாட்களாக காட்டுத் தீ பரவலாக எரிந்து ஏராளமான மூலிகை செடிகள் நாசமாயின. சுமார் மூன்று நாட்கள் போராட்டத்திற்கு பின்பு தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இந்நிலையில் நேற்று இரவு சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயில் அமைந்துள்ள சாப்டூர் வனச்சரகத்திற்கு உட்பட்ட பீட் எண் 5 ஊஞ்சக்கல் என்ற பகுதியில் மீண்டும் காட்டுத்தீ பரவத் துவங்கியது.
வனப் பகுதியில் காற்றின் வேகம் அதிகரித்து காணப்படுவதால் தீ மலை முழுவதும் வேகமாக பரவி 2வது நாளாக எரிந்து வருகிறது. இருந்த போதும் தீயை கட்டுப்படுத்த 10-க்கும் மேற்பட்ட வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். நாளை ஞாயிற்றுக்கிழமை பிரதோஷ தினம் என்பதால் பரவி வரும் காட்டுத்தீ காரணமாக பிரதோஷத்திற்கு மலையேறி சாமி தரிசனம் செய்ய மாவட்ட நிர்வாகம் மற்றும் வனத்துறையினர் அனுமதி வழங்குவார்களா? என்ற சந்தேகத்தில் பக்தர்கள் உள்ளனர்.
இந்த நிலையில் சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயில் மலைப்பகுதி பீட் 5 மணலூத்து பகுதியில் தீ வைத்ததாக தாணிப்பாறை ராம்நகர் காலனியை சேர்ந்த யானைக்கருப்பன் (60) என்பவரை சாப்டூர் வன அலுவலர் செல்லமணி தலைமையிலான வனத்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.







