“மதம் மாற்றுபவர்களுக்கு…” – மத்திய பிரதேச முதலமைச்சர் மோகன் யாதவ் சர்ச்சை பேச்சு!

மதம் மாற்றுபவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்படும் என மத்திய பிரதேச முதலமைச்சர் மோகன் யாதவ் சர்ச்சையாக பேசியுள்ளார்.

மத்திய பிரதேசத்தில் சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு பெண்களுக்கான சிறப்பு திட்டங்களை செயல்படுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் அம்மாநில முதலமைச்சர் பங்கேற்று திட்டங்களை தொடங்கி வைத்தார்.

தொடர்ந்து அந்நிகழ்ச்சியில் பேசிய அவர், “பெண் குழந்தைகளின் பாதுகாப்பு மற்றும் சுயமரியாதைக்கு அர்ப்பணிப்புடன் மத்தியப் பிரதேச அரசு செயல்படுகிறது. குழந்தைகளிடம் தவறாக நடந்துகொள்பவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதேபோல் இப்போது மத்தியப் பிரதேசத்தில் குழந்தைகளை மதம் மாற்றுபவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்படும்” என்றார்.

முதலமைச்சர் மோகன் யாதவின் பேச்சு சர்ச்சையான நிலையில், அவரின் பேச்சுக்கு காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ஆரிஃப் மசூத் விமர்சனம் செய்துள்ளார். இது குறித்து அவர், “ அம்பேத்கரின் அரசியலமைப்பு சட்டத்தை மாற்றப் போவதாக அவர் ஏற்றுக்கொள்ள வேண்டும் இல்லையென்றால் அதில் குறை இருப்பதாகக் கூற வேண்டும். ஏனென்றால் யாராவது தானாக முன்வந்து மதம் மாறினால் அது அரசியலமைப்புச் சட்ட உரிமை. மாநிலத்தை கடனில் தள்ளுவது, இளைஞர்களுக்கு எந்த வேலையும் வழங்காதது போன்ற பிரச்சினைகளிலிருந்து கவனத்தைத் திசைதிருப்பவே இது போல பேசுகிறார்கள்” என்று கூறியுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.