லிபியாவில் டேனியல் புயல் காரணமாக ஏற்பட்ட கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கில் 150 பேர் உயிரிழந்துள்ளனர்.
வடக்கு ஆப்பிரிக்காவில் மத்திய தரைக்கடல் பகுதியில் அமைந்துள்ள நாடு லிபியா. உள்நாட்டுப்போர் நடைபெற்று வரும் லிபியாவின் கிழக்கு பகுதியை கிளர்ச்சியாளர்களும், மேற்கு பகுதியை வெளிநாட்டு ஆதரவு பெற்ற அரசும் நிர்வகித்து வருகின்றன. இந்நிலையில், லிபியாவை டேனியல் புயல் தாக்கியுள்ளது.
டேனியல் புயல் காரணமாக ஏற்பட்ட கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கில் 150 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் லிபியாவின் கிழக்குப் பகுதியில் உள்ள டெர்னாவில் 2000க்கும் மேற்பட்டோர் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்திருக்கலாம் எனவும் அஞ்சப்படுகிறது. புயலுடன் கனமழையும் கொட்டித்தீர்த்தது. இதன் காரணமாக அணைகளில் நீர்மட்டம் உயர்ந்து திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்த வெள்ளப்பெருக்கில் பலர் சிக்கிக்கொண்டனர்.
இந்த புயலால் லிபியாவின் கடற்கரை நகரங்களில் கடுமையான சூறாவளிக் காற்றுடன் மழை பெய்தது. பாய்தா, சூசா, மார்ஜ் உள்ளிட்ட நகரங்கள் புயலின் கோரப் பிடியில் சிக்கின. முக்கிய நீர் நிலைகளில் இருந்து வெளியேறிய வெள்ளம் லிபியாவின் கிழக்கு பகுதியை வெள்ளக்காடாக்கியது.







