கர்நாடக ஆளுநர் தாவர்சந்த் கெலோட், விமானத்தில் ஏறுவதற்கு முன் விமானம் புறப்பட்டு சென்ற சம்பவம் விமான நிலையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கர்நாடக ஆளுநர் தாவர்சந்த் கெலாட் பெங்களூர் கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தில் இருந்து ராய்ச்சூருக்கு செல்ல திட்டமிட்டிருந்தார். அங்கு நடக்கும் மாநாட்டில் பங்கேற்பதுதான் இவரது பிளான். இதற்காக முன்கூட்டியே ஏர் ஏசியா நிறுவனத்திடம் விமானத்தில் டிக்கெட் முன்பதிவு செய்யப்பட்டது.
அவர் ஏர்போர்ட்டுக்கு வருவதற்கு முன்னரே லக்கேஜ் அனைத்தும் அங்கு தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து புக் செய்யப்பட்ட விமானம் வந்த நிலையில், அதில் லக்கேஜ்கள் ஏற்றப்பட்டுள்ளன. ஆனால் குறிப்பிட்ட நேரத்தில் ஆளுநர் விமான நிலையத்திற்கு வந்து சேரவில்லை என கூறப்படுகிறது. விமானம் புறப்படும் நேரம் நெருங்கியது. பின்னர் திட்டமிட்டபடி விமானம் அங்கிருந்து புறப்பட்டு சென்றது.
ஆனால் ஆளுநர் அதில் ஏறவில்லை. இந்த சம்பவம் பெரும் சலசலப்பை ஏற்படுத்திய நிலையில், ஆளுநரின் அதிகாரிகள் ஏர்போர்ட் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். நாங்கள் அவருடன் டெர்மினல்-2ல் காத்திருந்தோம். ஆனால் விமானம் புறப்பட்டுவிட்டதாக அதிகாரிகள் கூறினர். இதனையடுத்து சுமார் 1.30 மணி நேரம் கழித்து வேறு ஒரு விமானத்தில் அவர் புறப்பட்டு சென்றார். புகார் அளிக்கப்பட்டது தொடர்பாகவோ, அடுத்த கட்ட நடவடிக்கை தொடர்பாகவே ஆளுநர் மாளிகையிலிருந்து எவ்வித விளக்கமும் வழங்கப்படவில்லை.
இந்நிலையில் ஏர் ஏசியா நிறுவனம் இந்த சம்பவம் குறித்து விளக்கம் அளித்துள்ளது. அதில் “இந்த சம்பவத்திற்கு நாங்கள் மிகவும் வருந்துகிறோம். இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும். நிறுவனத்தின் தலைமைக் குழு, கவர்னர் அலுவலகத்தை தொடர்பு கொண்டு இந்த சம்பவம் குறித்த கவலைகளை நிவர்த்தி செய்ய உள்ளது. மேலும் கவர்னர் அலுவலகத்துடனான எங்கள் உறவை நாங்கள் ஆழமாக மதிக்கிறோம்.” இவ்வாறு அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.







