இலங்கை கடற்கொள்ளையர்களால் தாக்கப்பட்டு வேதராண்யம் மருத்துவமனையில் உள்ள 3 மீனவர்களை முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் சந்தித்து ஆறுதல் கூறினார்.
நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த புஷ்பவனம் மீனவ கிராமத்தைச் சேர்ந்த நாகமுத்து, பன்னீர்செல்வம், ராஜேந்திரன் ஆகிய 3 பேர் கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்கொள்ளையர்கள் மீனவர்களை வழிமறித்து வலைகள் மற்றும் மீன்பிடி உபகரணங்களை கொள்ளையடித்தும் மீனவர்களைத் தாக்கி விட்டு சென்றனர். இதில், காயமடைந்த மூன்று மீனவர்களும் வேதாரண்யம் அரசு மருத்துமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில், முன்னாள் அமைச்சரும், வேதாரண்யம் சட்டமன்ற உறுப்பினருமான ஓ.எஸ்.மணியன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மீனவர்களை சந்தித்து ஆறுதல் கூறினார். இதையடுத்து பேசிய ஓ.எஸ்.மணியன், இந்த பிரச்னையில் மத்திய, மாநில அரசுகள் தலையிட்டு என்ன செய்கிறோம் என்பதையும் என்ன செய்திருக்கிறோம் என்பதையும் வெளிப்படையாக சொல்ல வேண்டுமென வலியுறுத்தியுள்ளார்.








